திமுக ஆட்சிக்குவந்த பிறகு மறைந்த அதிமுக தலைவர்களுக்கும் உரிய முக்கியத்துவமும், மரியாதையும் அளித்துவருகிறது. ஏற்கெனவே நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடியதுடன், அவருக்குச் சிலையும் அமைத்தது திமுக அரசு. அதேபோல எம்ஜிஆர் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு, அவரது சிலைக்கு அரசின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
இதேபோல இன்று முன்னாள் முதல்வரும், அன்றைய அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், சென்னை மெரினா கடற்கரை அருகே தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலை அருகே நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு, பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுத்தும் செய்தி மக்கள் தொடர்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திமுகவின் இந்த நாகரீகச் செயல்பாட்டை பலரும் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் அரசு சார்பில் எந்த அமைச்சர் விழாவில் கலந்துகொண்டு, ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என்கிற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. வழக்கம்போல செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் அமைச்சர்களே பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
இந்தத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு பிரம்மாண்டமான வெற்றியைத் தேடித்தந்த மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியும் விழாவில் பங்கேற்றால் சிறப்பாக இருக்கும் என்றும், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர், அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர் என்பதைத் தாண்டி, அதிமுகவில் எஞ்சியுள்ள செயல்வீரர்களும் திமுகவுக்கு வந்தால் நல்ல எதிர்காலம் உண்டு என்று மறைமுகமாக அழைப்பு விடுக்கவும் வசதியாக இருக்கும் என்று திமுகவினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிமுகவின் முக்கியமான அமைச்சர்களில் ஒருவராக இருக்கும் சேகர் பாபுவும் இந்த விழாவில் பங்கேற்பது சிறப்பாக இருக்கும் என்றும் இணையம் வாயிலாக கருத்துத் தெரிவிக்கிறார்கள் திமுகவினர்.
அதேநேரத்தில், திமுகவில் மிகத் தீவிரமானவர்களோ, ‘ஊழல்வாதி, ஏ1 குற்றவாளி ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக திமுக அரசு கொண்டாடுவது தேவையற்ற செயல்’ என்று எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.