புதுச்சேரியில் இனி ரெஸ்டோ பார்கள் நள்ளிரவுக்கு மேல் இயங்கினால் 3 மாதம் உரிமம் சஸ்பெண்ட்


பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் இயங்கினால் 3 மாதங்களுக்கு உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படும் என கலால் துறை புது சுற்றறிக்கையை அனைத்து ரெஸ்டோ பார்களுக்கும் அனுப்பியுள்ளது.

புதுவை அரசின் வருவாயை பெருக்குவதற்காக புதிதாக ரெஸ்டோ பார்களுக்கு கலால் துறை அனுமதி வழங்கியது. புதுவை நகரம் மற்றும் கிராமப்புறங்களில் குடியிருப்பு பகுதிகள், கோவில், பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகிலும் ரெஸ்டோபார்கள் அமைக்க கலால் துறை அனுமதி வழங்கியது. இதனால் பல பகுதிகளில் பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன. ரெஸ்டோ பார்களால் கலாச்சார சீரழிவு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அதிகாலை வரை ரெஸ்டோ பார்களில் இருப்போர் போதையில் தங்குமிடங்களுக்கு திரும்பும்போது விபத்துகளும் ஏற்பட்டது. ரெஸ்டோ பார்களுக்கு வருவோர் உடுத்தும் ஆடைகளும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ரெஸ்டோ பார்களில் மது மட்டுமின்றி, போதை பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது.

இந்த நிலையில், துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், கஞ்சா உட்பட போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். ரெஸ்டோ பார் விவகாரமும் அவரின் கவனத்துக்கு சென்றது. இந்நிலையில், ஆளுங்கட்சி கூட்டணியிலுள்ள பாஜக அமைச்சர் சாய் சரவணன் குமார் தனது தொகுதியில் குறிப்பிட்ட ரெஸ்டோ பார்களை மூட ஆளுநரிடம் புகார் தந்தார். மதுபார்கள் இரவு 11 மணி வரை இயங்கலாம்.

ரெஸ்டோ பார்கள் ந ள்ளிரவு 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவை தாண்டி அதிகாலை வரை ரெஸ்டோ பார்கள் இயங்குவதாகவும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து, நள்ளிரவு 12 மணிக்கு மேல் இயங்கும் ரெஸ்டோ பார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இதையும் மாற்றி நள்ளிரவு 12 மணிக்கு மேல் ரெஸ்டோ பார்கள் இயங்கினால் அதன் 3 மாத உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படும் என கலால் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

x