கல்வியியல் மீதான அதிகாரம் கைவிட்டுப் போகும் அபாயம்!


‘மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் நிர்வாக, கல்வியியல் செயல்பாடுகள் அனைத்தும் இனி மத்திய அரசால் தீர்மானிக்கப்படும்’ என்ற ரீதியில் வெளிவந்துள்ள மத்திய அரசின் தேசிய உயர்கல்வித் தகுதிக் கட்டமைப்பு வரைவு அறிக்கை (Draft NHEQF), கல்வியாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டப்படிப்புகளில் செய்யப்போகும் மாற்றங்களுக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கை ஒன்றை, பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) பொதுமக்களின் கருத்துக்கேட்புக்காக ஜனவரி இறுதியில் வெளியிட்டது.

இதில், தேசிய கல்விக் கொள்கையில் தீர்மானிக்கப்பட்டதை நடைமுறைப்படுத்தும் விதமாக பி.ஏ., பி.எஸ்சி., எம்.ஏ., பி.இ., பி.டெக்., எம்.டெக். ஆகிய கலை, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் கொண்டுவரப் போகும் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீதான கருத்தை பிப்ரவரி 13-ம் தேதிக்குள் அனுப்புமாறு யூஜிசி அறிவித்தது. பின்னர் 21-ம் தேதிவரை அதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

உலக வர்த்தக மையத்தின் கல்விக் கொள்கை!

இதன்படி, இனி கலை, அறிவியல் எந்தப் படிப்பாக இருந்தாலும், உயர்கல்விக்குள் அடியெடுத்து வைக்க வேண்டுமெனில் நுழைவுத் தேர்வெழுத வேண்டும். அடுத்து, நான்காண்டு இளநிலை பட்டம், ஐந்தாண்டு முதுநிலை பட்டம் வழங்கப்படும். உதாரணத்துக்கு, பி.எஸ்சி பட்டப் படிப்பில் சேரும் மாணவர் ஓராண்டு + வேலைக்கான 2 மாத பயிற்சியுடன் வெளியேறலாம். அப்படியானால் அவருக்கு பி.எஸ்சி., சான்றிதழ் வழங்கப்படும். 2 ஆண்டுகள் + வேலைக்கான 2 மாத பயிற்சி பெற்றால் டிப்ளமோ வழங்கப்படும். மூன்றாண்டுகள் முடித்தால் பி.எஸ்சி., பட்டம். நான்காண்டுகள் வரை தொடர்ந்தால் ஹானர்ஸ் பட்டம். மேற்கொண்டு ஓராண்டு நீடித்தால் பி.எஸ்சி., ஆராய்ச்சிப் பட்டம் வழங்கப்படுமாம்.

“இப்படியான கல்வித் திட்டம் உலக வர்த்தக மையம் 90-களில் கொண்டுவந்த சர்வதேச சந்தைக்கான கல்விக் கொள்கை. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற அயல்நாடுகளின் பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குள் நுழையவும் தனியார் கல்லூரிகள் பெருகவும் மட்டுமே இது வழிவகுக்கும். எப்படியாவது மாணவர்களுக்குக் கல்வியை ஊட்ட நினைப்பதுதானே கல்வி நிறுவனமாக இருக்க முடியும்? அதைவிடுத்து ஓராண்டில், இரண்டாண்டில் கல்லூரியைவிட்டு மாணவர்கள் வெளியேறலாம். பிறகு, தேவையிருப்பின் எங்கு வெண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தொடரலாம் என்பதற்குப் பின்னால் பின்தங்கிய, அடித்தட்டு மக்களை உயர்கல்வியைவிட்டு அப்புறப்படுத்தும் காழ்ப்புணர்ச்சிதான் உள்ளது” என்கிறார், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் பொருளாளர் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணசாமி.

கிருஷ்ணசாமி

சர்ட்டிஃபிகேட் கிடைக்கும்... வேலை கிடைக்குமா?

”முன்பெல்லாம் ஒரு செமஸ்டரில் மதிப்பெண் இழந்தால் அரியர்ஸ் வைத்து அடுத்தடுத்த செமஸ்டரில் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள். இனிமேல் அதற்கும் வழியில்லை. academic bank of credit என்ற திட்டம் இங்கு வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு சில புள்ளிகள் வழங்கப்படும். அதைப் பொறுத்தே மேற்கொண்டு படிப்பை தொடரமுடியும். நடுவில் வெளியேறினாலும் பிறகு வேறெந்த கல்லூரியிலும் சேர்ந்து, விட்ட இடத்திலிருந்து தொடரலாம் என்பதெல்லாம் காதில் பூ சுற்றும் வேலை.

உள்ளூரிலேயே கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் தகவல்தொடர்பு இதுவரை சீரமைக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அதுமட்டுமின்றி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பட்டப்படிப்பின் தொடக்கத்தில்தான் சேர சட்டம் அனுமதிக்கிறது. இடையில் விலகி வேறொரு நிறுவனத்தில் சேர்ந்தால், அங்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? எப்போது வேண்டுமானாலும் படிப்பை விட்டு விலகலாம் எனில் சர்ட்டிஃபிகேட், டிப்ளமோ வைத்திருப்பவர்களுக்கு யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுதும் தகுதி உள்ளதாகக் கருதப்படுமா? அவர்களுக்கு என்ன வேலை கிடைக்கும்?

ஆன்லைனில் பட்டம் பெறுதல், தொலைநிலைக் கல்வி மூலமாகப் படித்தல், கல்லூரிக்கு வருகை தந்து படித்தல் என அனைத்தும் சமமாகக் கருதப்பட்டு ‘கிரெடிட் புள்ளிகள்’ அளிக்கப்படும் என்கிறது இந்த வரைவு. ஆனால், வேலைவாய்ப்புச் சந்தையில் இவை பெரும் குழப்பத்தை அல்லவா ஏற்படுத்தும்? இதற்கெல்லாம் தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்புகிறார் கிருஷ்ணசாமி.

பிரின்ஸ் கஜேந்திர பாபு

பல கல்லூரிகள் மூடப்படும் அபாயம்!

“அரசுக் கல்லூரிகள் அனைத்தும் 2030-க்குள் பல்துறைப் பாடப்பிரிவுகள் கொண்ட கல்வி, நிதி உள்ளிட்ட நிர்வாகத் தன்னாட்சி பெற்ற உயர் கல்வி நிறுவனமாக மாற வேண்டும் அல்லது தனக்கு ஏற்புத் தகுந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்துவிட வேண்டும் என்கிறது இந்த வரைவு. தமிழ்நாடு அரசு கல்லூரிகளுக்கு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசு நிதி போதிய அளவு தரவில்லை என்றால், நிர்வாக தன்னாட்சி பெற்றதாக அவை எப்படி உயர முடியும்? இதன் விளைவாக, தற்போது உள்ள கல்லூரிகளில் மூன்றில் இரண்டு பங்கு அடுத்த பத்தாண்டுகளில் மூடப்படும்” என்று எச்சரிக்கிறார், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

சட்டப் பேரவையில் உடனடியாக விவாதிக்க வேண்டும்!

“இந்த அபாயங்களைத் தேசிய கல்விக் கொள்கையின் வரைவு வந்தபோதே இரண்டாண்டுகளுக்கு முன்பே சுட்டிக்காட்டினேன். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஏற்படுத்திய கல்வி ஆய்வுக் குழுவில் அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் பொன்முடி, மாநில மாணவரணிச் செயலாளர் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், தருமபுரி எம்பி செந்தில்குமார், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி மற்றும் மன்றத்தின் உறுப்பினர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோருடன் நானும் உறுப்பினராக இருந்தேன்.

தேசிய கல்விக் கொள்கை மட்டும் நடைமுறைக்கு வந்துவிட்டால், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில சட்டமன்றங்கள் இயற்றியுள்ள சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்படும் மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள் இனி மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே செயல்பட முடியும். பல்கலைக்கழக உரிமையாளராக மாநில அரசுகள் இருக்கலாம், அதன் நிர்வாக, கல்வியியல் செயல்பாடுகள் அனைத்தும் மத்திய அரசால் தீர்மானிக்கப்படும். ‘திமுக ஆட்சிக்கு வந்தாலும் பெயருக்கு மட்டுமே நீங்கள் அமைச்சர்களாக இருப்பீர்கள்; அதிகாரம் பாஜகவிடம் மட்டுமே இருக்கும்’ என்று அப்போதே எச்சரித்தேன். இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

வரைவில் பரிந்துரைத்தவற்றை முழுதுமாக தேசிய கல்விக் கொள்கை என்று பாஜக அறிவித்துவிட்டது. அப்படியே நடைமுறைப்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது. இனியேனும் பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் இந்திய அரசின் உயர் கல்வித் துறை இந்த வரைவை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டாமல், அனைத்து மாநிலச் சட்டப் பேரவையிலும் விவாதித்து, அதன் கருத்துகளை துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்குத் தந்து, அதன் அறிக்கையை நாடாளுமன்றம் விவாதித்த பின்னரே இறுதிப்படுத்த வேண்டும்” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

அ.ராமசாமி

மாநில கல்விக் கொள்கை எப்போது?

இதுகுறித்து தமிழக அரசும் கல்வித் துறையும் எடுத்திருக்கும் முடிவு பற்றி, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் முனைவர் அ. ராமசாமியிடம் கேட்டபோது, “மாநில கல்விக் கொள்கையை தமிழக அரசு வகுத்து வருவதால், தேசிய கல்விக் கொள்கையின் அங்கமான உயர்கல்வித் தகுதிக் கட்டமைப்பு வரைவு அறிக்கை பற்றி இப்போது கருத்து தெரிவிக்க முடியாது” என்றார்.

மாநில கல்விக் கொள்கை வகுக்கும் பணி எந்த அளவுக்கு நடைபெற்றுள்ளது? பிப்ரவரி 21 அன்றோடு வரைவு அறிக்கை கருத்துக்கேட்புக்குக் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதே, இதற்கு திமுக அரசு உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டாமா? என கேட்டதற்கு, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கையில் எல்லோரும் மும்முரமாக இருக்கிறார்கள்” என்று முடித்துக் கொண்டார் ராமசாமி.

கல்விக்கென மத்திய மற்றும் மாநில அரசையும் சேர்த்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுவதால், எளிமையான சூழலில் செயலாற்றி வரும் உயர்கல்வி நிறுவனங்கள் இனி நீடிக்க முடியாத அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்படியானால் கிராமப்புற பின்தங்கிய நிலையிலிருந்து வரும் மாணவர்களும் இனி உயர்கல்வி பெறுவது கடினம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மாநில அரசுக்கு இனி கல்வி மீது எந்த அதிகாரமும் இருக்க முடியாது. மொத்தத்தில் இந்த வரைவு இந்திய அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்துக்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் மதிப்பளிக்காத ஆவணமாக உள்ளதாகவும், இது நடைமுறைக்கு வந்தால் கல்வியியல் மீதான அதிகாரத்தை மாநில அரசுகள் முழுதுமாக பறிகொடுக்க நேரிடும் என்றும் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

x