‘தமிழகத்தில் விசிக ஆட்சிக்கு வந்தால் பூணூல் அணிய தடை விதிக்கப்படும்’ என ட்விட்டரில் பதிவிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசையும், பூணூலை அறுப்போம் என்ற தடா ரஹீமையும் கைது செய்ய வேண்டும் என பிராமணர் சங்கம் புகார் அளித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில், “விடுதலை சிறுத்தைகள் தமிழகத்தை ஆளும் காலம் விரைவில் வரும். எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் முதல்வராகும் காலத்தை தமிழ்நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கின்றது. அப்போது பூணூல் அணிய தடை விதிக்கப்படும். சனாதன ஒழிப்பின் முதல்பணி அதுவே” என பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. வன்னியரசின் இந்தப் பதிவு பிராமணர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் வன்னியரசை கைது செய்யக்கோரி தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் கூறும்போது, “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில், எங்கள் தலைவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூணூல் தடை செய்யப்படும் எனவும் பூணூலை அறுப்போம் என பதிவு செய்துள்ளார். கர்நாடகாவில் நடக்கும் ஹிஜாப் பிரச்சினைக்கும், நமக்கும் சம்பந்தமில்லாத இந்தச் சூழலில், இது போன்ற சீப்பான அரசியல் செய்து வருகிறார் வன்னியரசு.
தமிழகத்தில் சாதி, மத கலவரத்தை தூண்டும் வகையில் வன்னியரசு கருத்து அமைந்துள்ள நிலையில், இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. பல ஆண்டுகளாக அனைத்து சாதி மக்களுடனும் பிராமணர்கள் நட்பாக இருக்கிறார்கள். இதுவரை எங்களால் எந்தப் பிரச்சினையோ கலவரமோ வந்ததில்லை.
இதேபோல் இந்திய தேசிய லீக் நிர்வாகி தடா ரஹீமும் தனது வலைதள பக்கத்தில், பூணூல் அறுப்பு போராட்டம் நடைபெறும் என பதிவிட்டுள்ளதும் கண்டிக்கதக்கது.
சில முகவரி இல்லாத தலைவர்கள் விளம்பரத்துக்காக இது போன்ற கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். எனவே, தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மதக் கலவரத்தை தூண்டும் விதமாக கருத்துகளை பதிவிட்ட வன்னியரசு மற்றும் தடா ரஹீம் ஆகியோரை உடனே காவல் துறையினர் கைது செய்து, தமிழகத்தில் அமைதியை நிலை நாட்டவேண்டும்” என கேட்டுக் கொண்டார்.