தந்தை மீது பொய் வழக்கு - ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் குற்றச்சாட்டு


முன்னாள் எம்பி ஜெயவர்தன்

பாசிச திமுக அரசு, தன் தந்தை மீது வேண்டுமென்றே பொய் வழக்கு போட்டுள்ளதாக முன்னாள் நாடளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுமான ஜெயவர்தன் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை, இன்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை 3 மணிக்கு ஒத்திவைத்தார். அதைத் தொடர்ந்து ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜெயக்குமாரின் மகனுமான ஜெயவர்தன்.

அப்போது அவர், மு.க ஸ்டாலின் திட்டமிட்டு தன் தந்தை மீது பொய் வழக்கு போட்டுள்ளதாகவும், தேர்தலன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கை தேர்ந்த ரவுடி, 420, கிரிமினலை தான் தனது தந்தை பிடித்து கொடுத்துள்ளார் என தெரிவித்தார்.

மேலும், தங்களுடைய வாகன ஓட்டுநர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறிய அவர், இப்படி 420, சமூக விரோதிகளை திமுக ஊக்குவிக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமன்றி தங்கள் கட்சியினரை அச்சுறுத்த வேண்டும், பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வழக்கை மாற்றியுள்ளதாகவும் அதற்கு அதிமுக ஒருபோதும் அஞ்சாது எனவும் அவர் கூறினார். மேலும், வழக்கை மாற்றி நீதிமன்றத்தில் ஒரு நாடகத்தை திமுக தரப்பு அரங்கேற்றி உள்ளதாகவும், சட்டப்போரட்டம் மூலம் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால் தங்களுக்கு எந்தப் பயமும் இல்லை எனவும், நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது எனவும், பாசிச அரசாங்கமான திமுக அரசுக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் மக்கள் நலன் மீது சிறிதும் அக்கறை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

x