முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக பிரமுகரைத் தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, 49-வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் திமுகவினர் கள்ள ஓட்டுப்போட முயல்வதாக தகவல் கிடைத்து அங்கு வந்த, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர், அங்கிருந்த திமுக பிரமுகர் ஒருவரைப் பிடித்து தாக்கி, அவரை அரை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்று காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து, அந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, கள்ள ஓட்டுப்போட முயன்ற நபரைப் பிடித்து கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, ஜெயக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து திமுக பிரமுகர் நரேஷ் அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை போலீஸார் 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல, அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 113 அதிமுகவினர் மீது ராயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில், நேற்று முன்தினம் இரவு மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையிலான போலீஸார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, அவரது வீட்டில் வைத்து கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மீண்டும் ராயபுரம் போலீஸார் கைது செய்து, பூந்தமல்லி கிளைச் சிறையிலிருந்து அழைத்துவந்து ஜார்ஜ் டவுன் 16-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரிக்க மறுத்த நீதிபதி

சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 15-வது மாஜிஸ்திரேட் நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த் விடுமுறை என்பதால், 16-வது மாஜிஸ்திரேட் நீதிபதி தயாளன் தன்னால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என கூறினார்.

அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றி வரும் நீதிபதி தவுலத்தம்மாளிடம், 16-வது மாஜிஸ்திரேட் தயாளனே விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் அனுமதி கேட்டதையடுத்து அனுமதி வழங்கப்பட்டது.

முன்னதாக சாலைமறியலில் ஈடுபட்ட வழக்கில் ஆஜர்படுத்தபட்ட ஜெயக்குமாரை மார்ச் 9-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கறிஞர்கள் வாதம்

ஜெயக்குமார் தரப்பில் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், “ஜெயக்குமார் மீது அனைத்துப் பிரிவுகளும் ஜாமீனில் வெளிவரக்கூடிய வகையில் வழக்கு பதியபட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும்” என கேட்டு கொண்டார். மேலும், “அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா பதிவை பார்த்தால் உண்மை தெரியும். புகார் கொடுத்தவரை மனுதாரர் ஜெயக்குமார் தொடவில்லை” எனவும் வாதிட்டார்.

திமுக பிரமுகர் நரேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சட்டம் படித்தவர், இது போன்று வெளிப்படையாக மிரட்டியுள்ளதை சுட்டிக்காட்டி அன்றைய தினம் நரேஷை கொலை செய்திருப்பார்கள் என்றும் அவருக்கு ஜாமீன் வழங்கினால் புகார் கொடுத்தவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவரை ஆயிரம் பேர் முன்பு மிரட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால், இது கொலை முயற்சி என்ற வகையில் வழக்கை 307 ஆக மாற்றியுள்ளதாகவும், மேலும் ஜெயக்குமார் மீது தகவல் தொழில்நுட்பப் பிரிவு வழக்கும் சேர்க்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர், 307 பிரிவுக்கான குற்றமே நடக்கவில்லை எனவும், அதற்கான முகாந்திரமும் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றார்.

எதன் அடிப்படையில் 506(2) பிரிவைச் சேர்த்தார்கள்? கொலை மிரட்டலே இல்லை என்றபோது கொலை முயற்சி எப்படி வரும் என்று ஜெயக்குமார் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் வாதிட்டார். அப்போது, புகார்தாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை உணவு இடைவேளைக்குப் பிறகு ஒத்திவைத்தார். இடைவேளைக்குப் பிறகு நீதிமன்றம் கூடிய நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீஸார் ஜெயக்குமாரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

x