மதுரையில் மொத்தமுள்ள 100 வார்டுகளில், திமுக 77 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் 23 இடங்களிலும் போட்டியிட்டன. 77 வார்டுகளில் போட்டியிட்ட திமுக 67 இடங்களில் வெற்றிபெற்றது. இது 87 சதவீத வெற்றியாகும்.
இதேபோல காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களிலும்(62.5%), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 8 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களிலும்(50%), விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்திலும்(50%) வெற்றிபெற்றன. ஆனால், மதிமுக 3 வார்டுகளில் போட்டியிட்டு 3 வார்டுகளிலுமே வெற்றிபெற்றது. இத்தனைக்கும் அந்தக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் நிற்காமல், தனது பம்பரம் சின்னத்திலேயே நின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் அதிமுக மொத்தம் 99 வார்டுகளில் போட்டியிட்டு 15 இடங்களிலும்(15%), தமிழ் மாநில காங்கிரஸ் ஓரிடத்தில் போட்டியிட்டு 0 இடத்திலும்(0%), பாஜக 99 வார்டுகளில் போட்டியிட்டு ஓரிடத்திலும்(1%) வெற்றிபெற்றிருக்கின்றனர்.
விரைவில் கவுன்சிலர்களின் பதவியேற்பு நிகழ்வும், மேயர், துணை மேயர் தேர்தலும் நடைபெற உள்ளதால், மதுரை மாமன்ற கூட்ட அரங்கை சீரமைத்து அழகுபடுத்தும் பணிகள் துரிதமாக நடந்துவருகின்றன. மதுரை மாநகராட்சியில் இதுவரையில் 72 கவுன்சிலர்கள் தான் இருந்தார்கள். 100 வார்டாக உயர்த்தப்பட்ட பிறகு, இப்போதுதான் தேர்தல் நடந்துள்ளது. எனவே, கூடுதல் கவுன்சிலர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.