‘மக்களைத் தேடி மருத்துவம்’: 50-வது லட்சம் பயனாளிக்கு நேரில் ‘மருந்துப் பெட்டகம்’ வழங்கினார் முதல்வர்


முதல்வர் மு.க.ஸ்டாலின்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் 50-வது லட்சம் பயனாளிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருந்துப் பெட்டகத்தை நேரில் வழங்கினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்‘ தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றுக்கான மருந்துகள், அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 50-வது லட்சம் பயனாளியான, செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கத்தில் இருக்கும் பாஞ்சாலி என்பவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து மருந்துப் பெட்டகத்தை வழங்கினார். பின்னர், அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். மருத்துவர்களிடம் சிகிச்சை முறையையும் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து இத்திட்டத்தின்கீழ், மேலும் சில பயனாளிகளின் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று, அவர்களுக்குத் தேவையான மருந்துப் பெட்டகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அடுத்து, புதிதாய் 188 ஆம்புலன்ஸ் சேவையையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ திட்ட பயனாளிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு அடுத்த 48 மணி நேரத்தில் இலவச சிகிச்சை அளிக்கும் இந்தத் திட்டம், கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் பயன்பெற்றவர்கள், முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பலருக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

x