கூடிக் கலைந்தது புதுச்சேரி சட்டப்பேரவை


இன்று கூடிய புதுச்சேரி சட்டப்பேரவை

சட்டப்பேரவைக்கு வருகைதரும் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பதவியேற்ற பின்னர், அதன் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு 26 முதல் செப்டம்பர் மாத இறுதிவரை நடந்தது. அப்போது முழுமையான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

இந்நிலையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், வருகிற மார்ச் 2-ம் தேதிக்குள் சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும். இதன்படி இன்று சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் சட்டப்பேரவை வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

வெளிநடப்பு செய்த சட்டப்பேரவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

காலையில் சட்டப்பேரவை கூட்டம் கூடியதும், மறைந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத், பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தை 10 நாட்கள் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. எதிர்க்கட்சித் தலைவரான திமுக சட்டபேரவை உறுப்பினர் சிவா இக்கோரிக்கையை வலியுறுத்தினார்.

நீட் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்கெல்லாம் அனுமதி அளிக்கப்படாது என்ற நிலையில், திமுக உறுப்பினர்கள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு வெளிநடப்பு செய்தனர். அதை அடுத்து உடனடியாக சட்டபேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சட்டபேரவை கூடிய 21 நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டதால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

x