கொடைக்கானலில் கோடை விழா தொடக்கம்: சுற்றுலா பயணிகளை கவர்ந்த மலர் கண்காட்சி


கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61-வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்றுதொடங்கியது. இதில், 80 ஆயிரம்கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட சேவல், மயில், டெடிபியர் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன.

சுற்றுலா, தோட்டக்கலை மற்றும்மலைப் பயிர்கள் துறை சார்பில் நேற்று நடைபெற்ற 61-வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழாதொடக்க விழாவுக்கு திண்டுக்கல் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தார். தோட்டக் கலைதுணை இயக்குநர் காயத்ரி வரவேற்றார். வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார்.

மலர்க் கண்காட்சியையொட்டி நடவு செய்யப்பட்ட சால்வியா, பிங்க் அஸ்டர், டெல்பினியம், டேலியாஉட்பட 15 வகையான 2.50 லட்சம்மலர்ச் செடிகள் பூத்துக் குலுங்கின.கண்காட்சியின் சிறப்பு அம்சமாக சேவல், மயில், டெடி பியர், லைட்லேம்ப், வீடு, ஈமு கோழி ஆகியவை80 ஆயிரம் கார்னேஷன் மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட கிங் காங், டிராகன், பாண்டா கரடி, வரையாடு, வீணை ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

61-வது மலர் கண்காட்சி என்ற பதாகை கொய் மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 30 வகையான, 20 ஆயிரம் கொய் மலர் தொட்டிகள், 360 டிகிரி செல்ஃபி பூத் உள்ளிட்டவையும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இரவில் மின்னொளியில் ஜொலித்த பூங்கா மற்றும் லேசர் லைட் ஷோவை சுற்றுலாப் பயணிகள் கண்டு வியந்தனர். தொடக்க விழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோடை விழாவையொட்டி வரும் 21-ம் தேதி படகுப் போட்டி, 22-ல் நாய்கள் கண்காட்சி, 23-ல் படகு அலங்காரப் போட்டி, 24-ல்மீன் பிடித்தல் போட்டி, 26-ம் தேதி நிறைவு விழா ஆகியவை நடைபெற உள்ளன.

கட்டணத்தை குறைக்க.. வேளாண் உற்பத்தி ஆணையர்அபூர்வா செய்தியாளர்களிடம் கூறும்போது, லட்சக்கணக்கில் பூத்துள்ள மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்காக, நடப்பாண்டு 10 நாட்களுக்கு கண்காட்சி நடத்தப்படுகிறது. கண்காட்சி நுழைவுக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

x