சென்னை கடற்கரை சாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 3 அலங்கார ஊர்திகளையும் அங்கே மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஜன.26 குடியரசு தின விழாவில் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில், தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் 3 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெற்றது.
தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கண்டுகளிக்கும் வகையில் அந்த அலங்கார ஊர்திகள் வலம் வந்தன. பின்னர் சென்னை மாநகர மக்களுக்காக மெரினா கடற்கரையின் விவேகானந்தர் இல்லம் எதிரே அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. பிப்.20 அன்று முதல் 3 தினங்களுக்கு அவை பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பிப்.21 அன்று அவ்வழியாக பயணித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அலங்கார ஊர்திகளை காணவந்திருந்த பள்ளி மாணவ மாணியரிடம் கலந்துரையாடினார். மேலும், அவர்களின் விருப்பத்துக்காக செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
மாணவர்களின் இந்த ஆர்வம் காரணமாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்றும், அலங்கார ஊர்திகளின் காட்சிப்படுத்தலை மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(பிப்.23) உத்தரவு பிறப்பித்தார்.