ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, தேர்தல் அரசியலில் கால்பதித்த விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் களம் இறங்கினர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலை போல் இல்லாமல் இதில் முறைப்படியான அறிவிப்பு கொடுக்கப்பட்டு, இயக்கத்தின் கொடி, விஜயின் படம் ஆகிவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால், முன்பைவிட அதிக இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப அந்தந்த மாவட்டங்களில், எந்தெந்த இடங்களில் போட்டியிடலாம் யார் போட்டியிடலாம் என்பதை அந்தந்த மாவட்ட தலைவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி மாவட்ட தலைவர்கள் வெற்றிபெறச் சாத்தியமுள்ள இடங்களில், வேட்பாளர்களை நிறுத்தினர். அதன்படி சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் களமிறக்கப்பட்டனர்.
அவர்களில் புதுக்கோட்டை நகராட்சி 4-வது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி 3-வது வார்டில் போட்டியிட்ட மோகன் ராஜ், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் போட்டியிட்ட வேல்முருகன், திருச்சி மாவட்டம் பூவாலூர் பேரூராட்சி 15-வது வார்டில் போட்டியிட்ட வி.மேனகா, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 21-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட சைதானி முகமது கவுஸ் ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
மாநகராட்சி வார்டுகளில் எதையும் வெல்ல முடியவில்லை என்றாலும், சென்னை மாநகராட்சியில் ஒரே ஒரு வார்டில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தைப் பெற்றுள்ளது விஜய் மக்கள் இயக்கம்.
முதல்முறையாக பேரூராட்சி, நகராட்சிகளில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கால் பதிக்கப் போகிறார்கள். இவர்களின் செயல்பாடுகளே, அடுத்து வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது இந்த இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை எடை போடுவதற்கான காரணிகளாக அமையக்கூடும்.