திமுகவினரை தாக்கியதாக கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, கள்ள ஓட்டுப் போட வந்த திமுக நபரை பிடித்துக் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் காவல் துறையினர் எடுக்கவில்லை எனக் கூறி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அத்துமீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் மீது ராயபுரம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்த வழக்கில் ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, திமுகவினரை தாக்கியதாக ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.