நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தனது சொந்தத் தொகுதியை கோட்டைவிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியால், குமாரபாளையம் நகராட்சியில் வென்றுள்ள சுயேச்சை வேட்பாளர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் காத்திருப்பதாகப் பேசப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் மட்டுமன்றி, கட்சியிலும் ‘பவுர்புல்’ நபராக வலம் வந்தவர் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி. அவர் தொடர்ச்சியாக 4-வது முறையாக எம்எல்ஏவாக உள்ளார். அதில் ஒருமுறை திருச்செங்கோடு தொகுதியிலும், தொடர்ச்சியாக 3 முறை குமாரபாளையம் தொகுதியிலும் எம்எல்ஏவாக உள்ளார்.
இதில் கடந்த 10 ஆண்டுகள் அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். கட்சி மற்றும் ஆட்சியில் கோலோச்சியபோதும், தனது சொந்தத் தொகுதியின் தலைமையிடமான குமாரபாளையம் மட்டும் அவரது நேரடி கன்ட்ரோலில் இல்லாமல், எப்போதும் ‘அவுட் ஆப்’ கன்ட்ரோலிலேயே உள்ளது.
கடந்த 2011-2016-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில், சுயேச்சையாக களம் இறங்கிய சிவசக்தி தனசேகரன் என்பவர், தான் மட்டுமின்றி தனது ஆதரவாளர்களை சுயேச்சைகளாக களம் இறக்கி ஆளுங்கட்சியான அதிமுகவை பதறவைத்தார்.
அந்தத் தேர்தலில் குமாரபாளையம் நகராட்சியை அதிமுக இழந்தது. அடுத்த 5 ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இச்சூழலில் இம்முறை நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், குமாரபாளையம் நகராட்சியை கைப்பற்ற முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி ‘தீயாய்’ வேலை செய்தார். எனினும், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 14 வார்டுகளை திமுக கைப்பற்றிவிட்டது.
மீதமுள்ளதில் 10-ல் அதிமுகவும், 9-ல் சுயேட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். திமுகவைக் காட்டிலும் குறைந்த இடங்களிலேயே அதிமுக வெற்றி பெற்றுள்ளதால், இம்முறையும் குமாரபாளையம் நகராட்சி அதிமுவை விட்டு கை நழுவும் நிலை ஏற்பட்டுள்ளதால் தங்கமணி தரப்பு சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
அதேவேளையில் நகராட்சி சேர்மன் பதவியைப் பிடிக்க 17 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதில் ஆளுங்கட்சியான திமுக, நகராட்சி சேர்மன் பதவியை கைப்பற்ற சுயேச்சைகளை தம்பக்கம் இழுக்க வாய்ப்புகள் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அதே காய் நகர்த்தல்களை தங்கமணியும் மேற்கொள்வார் என்பதால், குமாரபாளையம் நகராட்சி சுயேச்சைகள் ‘உச்சகட்ட’ மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, குமாரபாளையம் தொகுதியில் வரும் பள்ளிபாளையம் நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் 13 வார்டுகளில் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியான மதிமுகவும் வெற்றி பெற்றுள்ளனர். 8 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதனால் பள்ளிபாளைம் நகராட்சியும் திமுக வசம் செல்ல உள்ளது.
அதுபோல் முன்னாள் அமைச்சர் தங்ககமணி வீடு அமைந்துள்ள ஆலாம்பாளையம் பேரூராட்சியில் 15 வார்டில் 9-ல் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 6-ல் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
தனது சொந்த பேரூராட்சியும் திமுக வசம் சென்றுள்ளதால், முன்னாள் அமைச்சர் தங்கமணி தரப்பு பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.