பலாத்கார சாமியாருக்கு பரோல் உடன் ‘இஸட்+’ பாதுகாப்பு


சாமியார் குர்மீத்

ஹரியானாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் என்ற சாமியாரை அம்மாநில அரசு அண்மையில் பரோலில் விடுவித்து இருந்தது. இத்துடன் அவருக்கு இஸட்+ பாதுகாப்பும் வழங்கியது தற்போது தெரிய வந்துள்ளது.

தேரா சச்சா சௌதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் பலாத்கார வழக்கில், 20 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு ஆளாகி இருப்பவர். ஹரியானாவின் ரோதக் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்த சாமியாரை பிப்.7 அன்று ஹரியானா அரசு 21 நாள் பரோலில் விடுவித்தது. கூடுதலாக அவரது பாதுகாப்புக்காக இஸட்+ பாதுகாப்பும் அளிக்கப்பட்ட விவகாரம் இன்று(பிப்.22) வெளிப்பட்டுள்ளது.

குர்மீத் ராம் சாமியாருக்கு காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், இந்த உயர் அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குர்மீத்துக்கு பரோல் வழங்கப்பட்டது முதல் உயரடுக்கு பாதுகாப்பு வரை அனைத்தும் பஞ்சாப் தேர்தலை முன்னிட்டே நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஹரியனாவை ஆளும் பாஜக அரசின் முதல்வர் மனோகர் லால் கட்டார், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை புறந்தள்ளி உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக பிப்.20 அன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டே பிப்.7 அன்று சாமியார் குர்மீத் ராம் பரோலில் விடுவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் வாசித்தன. பஞ்சாப்பின் பல்வேறு மாவட்டங்களில் குர்மீத் சாமியாருக்கு ஆதரவாளர்கள் அதிகம் என்பதால், இந்த நடவடிக்கைக்கு ஹரியானா அரசு இணங்கியதாக சொல்லப்பட்டது.

தற்போது பஞ்சாப் தேர்தல் முடிவடைந்து, சாமியாரின் பரோல் காலமும் அடுத்த வாரம் நிறைவடைய உள்ள நிலையில், குர்மீத்துக்கு உயரடுக்கு பாதுகாப்பு தரப்பட்ட தகவல் வெளியாகி சர்ச்சையை கூட்டியுள்ளது. ஆசிரமத்தில் வைத்து 2 பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சாமியார், தன்னுடைய அலுவலக ஊழியர் மற்றும் ஒரு பத்திரிக்கையாளரை கொன்றது தொடர்பான வழக்குகளிலும் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

x