நகர்ப்புற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி: அதிமுக, பாஜக தோல்வி


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றியை ருசித்துள்ளது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தோல்வியை சந்தித்துள்ளன. 21 மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி நடைபெறற தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வசித்து வந்தனர். சென்னை உள்பட 21 மாநகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.

138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளில் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. 3 நகராட்சிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 3 இடங்களை பிடித்துள்ளது. 489 பேரூராட்சிகளில் தி.மு.க. கூட்டணி தற்போது வரை 389 பேரூராட்சிகளை கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க.வுக்கு 20 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 3 இடத்திலும், பா.ம.க 3 இடத்திலும், நாம் தமிழர் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 194 வார்டுகளின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக 173, அதிமுக 15, சுயேச்சைகள் 4, பாஜக 1, அமமுக 1, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஒரு வார்டுகளில் கூட வெற்றி பெறவில்லை.

ஆவடி மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக கூட்டணி 43 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. அதிமுக 4, சுயேச்சை ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளில் 54 வார்டுகளில் திமுக கூட்டணியும், அதிமுக 9 வார்டுகளிலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 50 வார்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணி 32 இடத்தையும், அதிமுக கூட்டணி 9 இடத்தையும், சுயேச்சைகள் 6 இடத்தையும், பாமக 2 இடத்தையும், பாஜக ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது. இதேபோல் மற்ற மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

x