ஒரு வாக்கு கூட வாங்காத அதிமுக வேட்பாளர்


இப்ராம்ஷா

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஒருவர், ஒரு வாக்கு கூட பெறவில்லை என்பது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

பிரிதிவிராஜ்

கறம்பக்குடி பேரூராட்சியில் 7-வது வார்டுக்கு, அதிமுக சார்பில் இப்ராம்ஷா என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார். தேர்தல் நெருங்கிய வேளையில் அவர் தனக்காக பிரசாரம் மேற்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இருந்தாலும் அதிமுக வேட்பாளர் என்பதால் அதிக வாக்குகளைப் பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், அவருக்கு ஒரு வாக்கு கூட விழவில்லை. இத்தனைக்கும் அந்த 7-வது வார்டில்தான் அவர் வசித்து வருகிறார். அவருடைய குடும்பமும் அங்குதான் இருக்கிறது. அப்படியும், ஒரு வாக்கு கூட விழவில்லை என்பது தமிழ்நாடு அளவில் பேசுபொருள் ஆனது. இரட்டை இலை சின்னத்தில் ஒரு ஓட்டு கூட இல்லாதது கண்டு, வாக்குச்சாவடி முகவர்கள் அதிர்ந்து போனார்கள்.

பிருதிவிராஜன் தந்தைக்கு சால்வை அணிவிக்கும் விஜயபாஸ்கர்

அந்த வார்டில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்ட பிருதிவிராஜ் என்பவர் வெற்றி பெற்றார். அதன் பிறகுதான் மற்றவர்களுக்கு அதிமுக வேட்பாளர் ஒரு வாக்கு கூட வாங்காததன் ரகசியம் தெரிந்தது.

இப்ராம்ஷாவிடம் பிரிதிவிராஜ் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தார். மற்ற வேட்பாளர்களையும் அவர் சமரசம் செய்தே, இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார் என்பதும், அதனாலேயே தனது வாக்கை கூட இரட்டை இலைக்கு செலுத்தாமல், சொன்ன சொல்லைக் காப்பாற்றி இருக்கிறார் இப்ராம் ஷா என்பதும் அனைவருக்கும் தெரியவந்தது.

பிருதிவிராஜ் காரில் அதிமுக கொடியை மாட்டும் விஜயபாஸ்கர்

திடீர் திருப்பம்

தனது மாவட்டத்தில் தங்கள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர், ஒரு வாக்கு கூட பெறாத நிலையைக் கண்டு அதிர்ந்துபோன முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உடனடியாக சுதாரித்துக்கொண்டார். கறம்பக்குடி 7-வது வார்டில் வெற்றிபெற்ற பிரிதிவிராஜையும் அவரது தந்தையையும் சந்தித்துப் பேசி, அவர்களை அதிமுகவில் உடனடியாக இணைத்தார்.

பிருத்விராஜின் காரில் மாட்டப்பட்டிருந்த அமமுக கொடியை கழற்றி அதிமுக கொடியை செருகினார் விஜயபாஸ்கர். இதன் மூலம் ஒரு ஓட்டு கூட கிடைக்காத இடத்தில் வெற்றி பெற்றவரையே அதிமுககாரராக மாற்றி, அதிமுகவுக்கு ஏற்பட்ட களங்கத்தை ஓரளவுக்குத் துடைத்திருக்கிறார் விஜயபாஸ்கர் என்று சொல்லலாம்.

x