’நாங்க வந்துட்டோம்னு சொல்லு..’ இணையத்தை உலுக்கும் பாஜகவினர்!


அண்ணாமலை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வெற்றிகளை பெற்றிருப்பதாக பாஜகவினர் பெருமிதம் கொண்டுள்ளனர். இதனை முன்னிட்டு ’நாங்க வந்துட்டோம்னு சொல்லு’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டியிடுவோர் என்ற பகடிக்கு ஆளான பெருமை பாஜகவுக்கு உண்டு. மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு அந்த நிலையில் மாற்றம் தென்பட ஆரம்பித்தது. தமிழகத்தில் அதிமுகவுடனான கூட்டணி மூலம் சட்டமன்றத் தேர்தலில் கணிசமாக தனது வாக்குவங்கியை பாஜக உயர்த்தி உள்ளது. மேலும் தேசிய கட்சிகளுக்கே உரிய சர்ச்சைகள் சூழ்ந்தபோதும், மாநிலத் தலைமையின் செயல்பாடுகளும் கட்சியின் செல்வாக்கை குறிப்பிட்ட வட்டாரங்களில் அதிகரித்து வருகின்றன.

திமுக அரசின் ரெய்டு மற்றும் வழக்குகளுக்கு தயங்கி பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அடக்கி வாசிக்க, பாஜக அந்த இடத்தில் நின்று பலத்த எதிர்க்குரல் கொடுத்தது. இந்த நம்பிக்கையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருந்து விடுபட்டு தனித்தும் நின்றது. இன்ப அதிர்ச்சியாக பாஜகவினர் எதிர்பார்க்காத இடங்களில்கூட வெற்றி கிடைத்து உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் என்பது கட்சி செல்வாக்கைவிட உள்ளூர் செல்வாக்கே முன்னிற்கும் என்பதாலும், குறைவான வாக்குப்பதிவு காரணமாக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு தீர்மானம் செய்யப்படுவதாலும், பாஜகவுக்கு கணிசமான வெற்றிகள் சேர்ந்து வருகின்றன. இந்த வெற்றிகளை பாஜகவை சேர்ந்தவர்களே எதிர்பார்த்திருக்கவிலை என்பது அவர்களின் பெருமகிழ்ச்சியிலிருந்து தெரிய வருகிறது. அதிலும் கன்னியாகுமரி வெற்றியை முன்னிறுத்தி பாஜகவினரின் கொண்டாட்டங்கள் தனியாக எதிரொலிக்கின்றன.

மாநில தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து பெரும்பாலானோர் பதிவிட்டு வருகின்றனர். ராகுல்காந்தி தனது தங்களை சீண்டியதே இந்த வெற்றிக்கு காரணம் என்று அவரது நாடாளுமன்ற பேச்சுக்கும் தமிழக வார்டு தேர்தலுக்கும் முடிச்சிட்டு சிலர் குதூகலித்து வருகின்றனர். இனி, தமிழகத்தில் அதிமுகவைவிட தாங்களே பிரதான எதிர்க்கட்சி என்றும், அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியமைப்போம் என்றும் தீவிரமாக முழங்கி வருகின்றனர்.

பாஜகவை கிண்டல் செய்துவரும் திமுகவினரும் இதே டிரெண்டிங் வாசகங்களை பயன்படுத்தி பதிவுகள் இட்டு வருகின்றனர். அதனாலும் ’நாங்க திரும்ப வந்துடோம்னு சொல்லு’ இன்றைய டிரெண்டிங்கில் முதன்மை வகித்து வருகிறது.

பாஜகவினருக்கு போட்டியாக நாம் தமிழர் கட்சியினரும், அதற்கு அடுத்தபடியாக விஜய் மக்கள் இயக்கத்தினரும் தங்களது வெற்றியை சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர். ஏனோ பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை அடக்கியே வாசிக்கின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட ஒருசில கட்சிகளின் ஆதரவாளர்கள் அமைதியில் ஆழ்ந்துள்ளனர். விஜய் ரசிகர்களுக்கு எதிராக களமாடியே பழகிவிட்ட அஜித் ரசிகர்கள், தேர்தல் முடிவுகளின் மத்தியில் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் பெருமையை பறைசாற்றி தங்கள் பங்குக்கு ’நாங்க வந்துட்டோம்னு சொல்லு’ என்கிறார்கள்.

x