திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஊர் ஊராக தனது ஆதரவாளர்களைத் திரட்டி போட்டிக் கூட்டம் நடத்தினார். ஆனாலும், அவர் திமுகவில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. முதல் சில தேர்தல்களில் திமுகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்த அவர், கடந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஒதுங்கியிருந்துவிட்டார்.
இந்தச் சூழலில், மதுரை மாநகராட்சி 47-வது வார்டில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து மு.க.அழகிரியின் ஆதவாளர் முபாரக் மந்திரி, தனது மனைவி பானுவை களமிறக்கினார். தேர்தல் வேலையில் திமுக நிர்வாகிகள் சிலரையும் இணைத்துக்கொண்டு அவர் பணியாற்றுவதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் பானு முபாரக் மந்திரி வெற்றிபெற்றுள்ளார். அவர் 4,561 வாக்குகளைப் பெற்றார். 2,291 வாக்குகளைப் பெற்று பாஜக 2ம் இடத்தைப் பிடித்தது. திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 3-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
மு.க.அழகிரி ஆதரவாளரின் இந்த வெற்றி, மதுரை திமுகவினரை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அவர் ஒன்றும் அழகிரி ஆதரவு வாக்குகளைப் பெறவில்லை. திமுகவுக்கு வார்டு ஒதுக்கப்படாததால், அதிருப்தியில் இருந்த திமுகவினரின் ஓட்டுகளைத்தான் வாங்கியிருக்கிறார் என்கிறார்கள் திமுகவினர்.
இதேபோல மதுரை 14வது வார்டில் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அந்தோணியம்மாளை எதிர்த்து, மு.க.அழகிரி ஆதரவாளரும், அவரோடு சேர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான முன்னாள் அவைத் தலைவர் இசக்கிமுத்து தன் மனைவி அன்னபூரணியை களமிறக்கியிருந்தார். இந்தத் வார்டில் திமுக வேட்பாளர் அந்தோணியம்மாள் வெற்றிபெற்றார். 2ம் இடத்தை அழகிரி ஆதரவாளர் அன்னபூரணி பிடித்தார். பாஜக 3வது இடத்துக்கும், அதிமுக 4வது இடத்துக்கும் தள்ளப்பட்டது.