திருச்செங்கோடு நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி 222 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 23வது வார்டில் அதிமுக முன்னாள் எம்எம்எல்ஏவான பொன்.சரஸ்வதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் புவனேஸ்வரி என்பவர் போட்டியிட்டார். இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது மொத்தம் 1931 வாக்குகள் பதிவாகின. இதில் திமுக வேட்பாளர் புவனேஸ்வரி 1,061 வாக்குகள் பெற்றார்.
அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி 839 வாக்குகள் பெற்றார். இதன்படி அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் 222 ஓட்டுகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் புவனேஸ்வரி வெற்றி பெற்றார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை தழுவிய பொன்.சரஸ்வதி, கடந்த 2011-2016ம் ஆண்டு வரை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவராக இருந்தார். அதன்பின் 2016-2021 வரை திருச்செங்கோடு எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.