மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிட்ட மாற்றுத் திறனாளி வெற்றி


முகமது புறோஸ்கான்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கொல்லங்கோடு நகராட்சி, தன் முதல் தேர்தலை சந்தித்தது. இங்கு 11-வது வார்டில் மாற்றுத் திறனாளியான முகமது புறோஸ்கானுக்கு, மார்க்சிஸ்ட் கட்சி வாய்ப்புக் கொடுத்தது. பள்ளிக்காலத்திலேயே இந்திய மாணவர் சங்கத்தில் தீவிரமாக செயல்பட்டுவந்த முகமது புறோஸ்கான், எம்.காம், எம்.பி.ஏ பட்டதாரி. இவர் தேர்தலில் வென்றிருப்பது கவனம் குவித்துள்ளது.

தற்போது 34 வயதாகும் இவர், அந்தப் பகுதி மக்களுக்காக இடதுசாரி இயக்கத்தினரோடு கைகோர்த்து பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தவர். குமரி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட ஒரே மாற்றுத் திறனாளியும் இவர்தான். கொல்லங்கோடு நகராட்சியின் 11-வது வார்டில், இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 20 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

கொல்லங்கோடு நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் திமுக 10 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சி 10 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும், அதிமுக, தேமுதிக தலா ஒரு இடங்களிலும் வென்றுள்ளன.

x