‘காமராஜர் நகர்மன்றத் தலைவராக இருந்த விருதுநகரை, தங்களுக்கே விட்டுத்தர வேண்டும்’ என ஒவ்வொரு முறையும் கூட்டணிக் கட்சிகளிடம் காங்கிரஸ் கட்சி கேட்பது வழக்கம். இந்த முறையும் அப்படியொரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்காத திமுக, மொத்தமுள்ள 36 வார்டுகளில் 11 வார்டுகளை மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கியது.
ஆனாலும் நகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், காங்கிரஸாரின் ஆதரவுடன் தனது மனைவியும் முன்னாள் சேர்மனுமான கார்த்திகாவை 35-வது வார்டில் சுயேச்சையாக களமிறக்கினார். அதேபோல 32-வது வார்டில் தனது மகன் க.விக்னேஸ்வரனை போட்டியிட வைத்தார்.
முதலில் சுயேச்சையாக வெற்றிபெறுவது, பிறகு தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கும்போது அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நாடார் சமூகத்து கவுன்சிலர்களை நாடார் மகாஜன சங்கம் மூலமாகப் பேசி, கார்த்திகாவை நகராட்சித் தலைவராக்கிவிடலாம் என்பது கரிக்கோல்ராஜின் திட்டமாக இருந்தது.
ஆனால், அவர் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கியிருக்கின்றன தேர்தல் முடிவுகள். அவரது மனைவி, மகன் 2 பேருமே இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்திருக்கிறார்கள். மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக 20, அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 8, சிபிம் 1, சுயேச்சை 3 இடங்களில் வென்றுள்ளனர்.
அதிமுக 3 வார்டுகளிலும், அமமுக 1 இடத்திலும் வெற்றிபெற்றுள்ளனர். கரிக்கோல்ராஜின் தோல்வி விருதுநகரில் மட்டுமின்றி, நாடார் மகாஜன சங்கம் வலுவாக உள்ள பகுதிகளில் எல்லாம் பேசுபொருளாகியிருக்கிறது.
இதேபோல, சிவகாசி மாநகராட்சியையும் திமுகவே கைப்பற்றி இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில், திமுகவை ஆதரித்து கனிமொழி எம்.பி பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.