கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் நகராட்சியில் திமுக, பாஜக கட்சிகள் சரிசமமான வார்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ளன. இந்த நகரசபையில் 6 சுயேட்சைகளும் வென்றுள்ளனர்.
பத்மநாபபுரம் நகரசபை, கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக முக்கியமான ஒன்று. இங்குதான் பிரசித்திபெற்ற பத்மநாபபுரம் அரண்மனையும் உள்ளது. குமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அமைச்சர் தொகுதி என்னும் அடையாளத்தைக் கொண்டது. இந்தத் தொகுதியில் வெற்றிபெற்ற மனோதங்கராஜ், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ளார்.
இங்கு மொத்தமுள்ள 21 வார்டுகளில் திமுக, பாஜக தலா 7 வார்டுகளில் வென்றுள்ளனர். ஜனதா தளம் ஒரு வார்டிலும், 6 இடங்களில் சுயேட்சைகளும் வென்றுள்ளனர். அதிமுக ஒரு வார்டில் கூட வெல்லவில்லை. திமுக, பாஜக சரிசமமாக வென்றிருப்பதால் நகரசபைத் தலைவர் பதவியை யார் கைப்பற்றுவார்கள் என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.