தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பேரூராட்சியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கைப்பற்ற பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் மா.சேகர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளரான இவர், இப்பகுதியில் பெரும் செல்வாக்கு படைத்தவர். மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் அமமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்ற போதிலும், ஒரத்தநாடு பகுதியில் அனைத்து இடங்களுக்கும் இவர் வேட்பாளர்களை நிறுத்தினார்.
இதில் ஒரத்தநாடு பேரூராட்சிக்கு 15 இடங்களிலும் அமமுக சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 13 இடங்களில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 9 இடங்களைப் பெற்றுள்ளது. இதனால் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அமமுகவுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் பேரூராட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெறும்போது, இந்தப் பேரூராட்சி அக்கட்சிக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
சேகரின் மனைவி திருமங்கை சேகர் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவரே பேரூராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இங்கே அதிமுகவுக்கு 3 இடங்களும், திமுகவுக்கு ஓரிடமும் இதுவரை கிடைத்துள்ளன. மேலும் 2 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.