கரூர் மாவட்ட நகராட்சிகள், பேரூராட்சிகளை கைப்பற்றுகிறது திமுக


புகழூர் நகராட்சி

அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளை திமுக கூட்டணியே கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அரவக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், வாக்குகள் எண்ணப்பட்டு 10 மணி நிலவரப்படி, இதுவரை 9 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

3-வது வார்டு திமுக வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றதால் ஏற்கனவே அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டார்.

இதனால் அரவக்குறிச்சி பேரூராட்சியில் திமுக கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது.

அதேபோல, கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் 8 வார்டுகளில் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. அதேபோல உப்பிடமங்கலம் பேரூராட்சி, புலியூர் பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணியே முன்னிலை வகிக்கிறது.

மாவட்டத்தில் உள்ள முக்கிய நகராட்சியான பள்ளபட்டி நகராட்சியில் 27 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில், இதுவரை 5 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 1,2,3,5 ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர்களும் 4-வது வார்டில் சுயேட்சையாகப் போட்டியிட்ட எஸ்டிபிஐ வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற வார்டுகளிலும் திமுக கூட்டணியினரே முன்னிலையில் இருப்பதால், அந்த நகராட்சியை திமுக கூட்டணியே கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் உள்ள இதர நகராட்சிகளான புகலூர் மற்றும் குளித்தலை ஆகிய நகராட்சிகளிலும் திமுக கூட்டணியே முன்னிலை வகிக்கிறது. அதனால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகராட்சி பேரூராட்சிகளை திமுக கூட்டணியே கைப்பற்றும் என்பதே தற்போது வரை உள்ள நிலைமை.

x