பள்ளி பெயர்களில் சாதிய அடையாளம் நீக்குதல் உள்ளிட்ட அம்சங்கள் பரிந்துரை: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கை சமர்ப்பிப்பு


சென்னை: தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு தமிழக அரசால் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

அந்தவகையில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, தனது பரிந்துரை அறிக்கையை தயார் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சமர்ப்பித்தார். அப்போது பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன், இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய பரிந்துரைகளின் விவரம் வருமாறு: பள்ளி பெயர்களில் இருக்கும் கள்ளர் மீட்பு, ஆதிதிராவிடர் நலன் போன்ற பெயர்களை நீக்கி அரசுப் பள்ளிகள் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும். மேலும், கள்ளர் மீட்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் உட்பட அனைத்து வகையான பள்ளிகளையும் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் கொண்டு வரும் முடிவை உடனே அமல்படுத்த வேண்டும். புதிதாக தொடங்கப்படும் பள்ளியின் பெயரிலும் சாதி பெயர் இடம்பெறாதவாறு நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும்.

இதுதவிர உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை அவ்வப்போது இடமாற்றம் செய்ய வேண்டும். அதேபோல், முதன்மை,மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் போன்ற முக்கிய பொறுப்புகளில் அந்தப் பகுதிகளின் பெரும்பான்மை சாதியைச் சேர்ந்தவர்களை பணியமர்த்தக்கூடாது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கும்போது சமூகநீதி பிரச்சினைகளின் மீதான அவர்களின் அணுகுமுறையைக் கண்டறிந்து பணிக்கு அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் சாதி தொடர்பான விவரங்கள் இருக்கக்கூடாது. எந்தசூழலிலும் ஆசிரியர்கள் மாணவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாதியை குறிப்பிட்டு கருத்துகளை கூறக் கூடாது. மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள், மோதிரங்கள் அணிவதையும், நெற்றியில் திலகம் இடுவதையும் தடை செய்ய வேண்டும். சாதியைக் குறிக்கும் வகையில் வண்ணம் பூசப்பட்ட சைக்கிள்களில் வருதல், சாதி உணர்வுகளை வெளிப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

இதற்கு இணங்கத் தவறினால், மாணவரின் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும்என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.

x