நேருவை நம்பியவர்கள் என்ன ஆனார்கள் - 5


கருணாநிதி, ஸ்டாலினுடன் செல்வேந்திரன்

திராவிடர் கழகத்தில் இருந்ததால், மாநில அளவிலும் திமுகவினரிடமும் நல்ல செல்வாக்கு பெற்றிருந்த செல்வேந்திரனுக்கு, திருச்சியிலும் அதிக மதிப்பிருந்தது. கருணாநிதி வந்தால், முன் அனுமதி பெறாமல் சென்று சந்திப்பவராக அவர் இருந்தார். கருணாநிதி திருச்சியியில் இருக்கும் நாட்களில், காலையில் நடைபயிற்சிக்கு இருவரும்தான் செல்வார்கள். அப்போது இருவரும் இந்திய அரசியலில் ஆரம்பித்து இலக்கியம் வரைக்கும் பேசுவார்களாம். பேச்சோடு பேச்சாக, திருச்சியின் அரசியல் நிலவரம் குறித்தும் செல்வேந்திரனிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்வாராம் கருணாநிதி.

செல்வேந்திரன்

லால்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த நேரு, திருச்சியின் மாபெரும் அரசியலைக் கண்டு முதலில் சற்றே மலைத்துப் போனார். அங்கே அவருக்கென்று தோள் கொடுக்க அப்போது யாருமில்லை. இப்போது, மலைக்கோட்டை மாநகரமே நேருவுக்குப் பின்னால் அணிவகுக்கும் என்பது வேறு. ஆனால், அவர் லால்குடியிலிருந்து திருச்சிக்கு வந்தபோது, அவருக்கென்று தனியான ஆதரவாளர்கள் இல்லை. என். செல்வராஜின் பின்னால் கட்சி இருந்தது. திருச்சி மாநகரச் செயலாளர் கே.கே.எம். தங்கராசு, நாகவேணி வேலு போன்ற செல்வாக்கான மனிதர்களும் அவர்களது ஆதரவாளர்களும் திருச்சி திமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். எங்கெங்கும் அவர்களது ஆதரவாளர்களே நிரம்பியிருந்தனர்.

அவர்களையெல்லாம் எப்படி சமாளிப்பது என்று மலைத்துப் போன நேருவுக்கு, மாமணியாகத் தெரிந்தவர் செல்வேந்திரன் தான். தலைவரிடமே செல்வாக்குப் பெற்றதோடு, அனைவருக்கும் நன்கு அறிமுகமானவரான செல்வேந்திரனை சிக்கெனப் பிடித்துக் கொண்டார். அதன்மூலம் தலைமையிடம் தொடர்பையும், திருச்சி மண்ணில் நல்ல அறிமுகத்தையும் ஏற்படுத்திக்கொள்ள முடிவெடுத்த நேரு, முழுக்க முழுக்க செல்வேந்திரனையே சார்ந்திருந்தார். செல்வேந்திரன் திருச்சி பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் இன்னொரு முக்கிய காரணம்.

ஸ்டாலினுடன் செல்வேந்திரன்

ஒவ்வொரு நாளும் காலையில் நேருவின் கார் நேராக உறையூரில் இருக்கும் செல்வேந்திரனின் வீட்டுக்குச்செல்லும். அங்கு தயாராக இருக்கும் செல்வேந்திரனை அழைத்துக் கொண்டுதான் நிகழ்ச்சிகளுக்குப் போவார் நேரு. காலை முதல் இரவுவரை செல்வேந்திரனை தன் கூடவே வைத்திருப்பார் நேரு. 1996-ல் நேரு அமைச்சராக இருந்தபோது, செல்வேந்திரன் இல்லாமல் அவருக்கு திருச்சியில் எதுவும் அசையாது. அந்த அளவுக்கு இருவரும் மிக நெருக்கமாக இருந்தார்கள்.

அந்த காலகட்டத்தில், நேருவின் அத்தனை செயல்பாடுகளையும் சீரமைத்து தொட்டதெல்லாம் வெற்றி தரும் அளவுக்கு உத்திகளை வகுத்துத் தந்தவர் செல்வேந்திரன் என்பார்கள். பெரியாரின் பெருமைகளைப் பேசிய வாயால், நேருவைப் பற்றிப் பேசினார் செல்வேந்திரன். நேருவின் செயலாற்றல் குறித்து, அவர் மேடைதோறும் பேசுவதைக் கேட்டு நேருமீது தனிமரியாதையே அதைக் கேட்பவர்களுக்கு ஏற்பட்டது.

தலைமையிடம் செல்வேந்திரனுக்கு இருந்த செல்வாக்கு, நேருவையும் மிக நெருக்கமாக கொண்டுபோய் நிறுத்தியது. செல்வராஜை சமாளிக்க அதே முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த செல்வேந்திரன், நேருவுக்கு பெரும் பக்கபலமாக நின்றார். அதேபோல, திருச்சி பகுதியில் இன்னொரு பெரும்பான்மை சாதியினரான கள்ளர் சமூகத்தைச் சமாளிப்பதற்கும் அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவரான செல்வேந்திரனை முன்னிறுத்தினார் நேரு. இவர் இப்படி செல்வேந்திரனின் ஆதரவில் முன்னுக்கு வந்ததால், மாநகர திமுக செயலாளர் கே.கே.எம். தங்கராசு, பலம்வாய்ந்த நாகவேணி வேலு உள்ளிட்டவர்களின் முக்கியத்துவம் குறைந்தது. தொட்டியம், முசிறி பகுதிகளில் இருந்த செல்வாக்குபெற்ற மேலும் பலர் செல்வேந்திரனின் கூர்மைமிக்க அறிவால் ஓரம்கட்டப்பட்டார்கள். அதைப் பயன்படுத்தி, நேரு கொஞ்சம் கொஞ்சமாக திருச்சியின் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்தார்.

மனக்கசப்பு

இந்நிலையில், நேரு ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் செல்வேந்திரனால் திடீரென கலந்து கொள்ள இயலவில்லை. அதனால் நேருவுக்கு சிறுவருத்தம் ஏற்பட்டது. சுற்றியிருந்தவர்கள் அதை ஊதிப் பெரிதாக்கினார்கள். ஏனோ, அடுத்து வந்த சில நிகழ்ச்சிகளில் செல்வேந்திரன் தலை தெரியவில்லை. அப்போதெல்லாம், திருச்சியில் தமிழ்ச் சங்கக் கூட்டம் நடப்பது வழக்கம். அதில், இலக்கியவாதிகளோடு திமுகவினரும் கலந்து கொள்வார்கள். செல்வேந்திரனின் ஏற்பாட்டில்தான் அக்கூட்டம் நடக்கும். ஒருகட்டத்தில், திமுகவினர் யாரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று ஒரு ரகசிய கட்டளை! அதனால், திமுகவினர் அக்கூட்டத்துக்குச் செல்லாமல் புறக்கணித்தனர்.

இதை அறிந்த என்.செல்வராஜ், தானாகவே வந்து செல்வேந்திரனுடன் சேர்ந்து கொண்டார். இருவரும் இணைந்து தமிழ்ச் சங்கக் கூட்டத்தை பிரமாதமாக நடத்தினார்கள். ஏனோ தெரியாது... செல்வேந்திரன் வீடு இருக்கும் உறையூர் வழியாகச் செல்லும் நேருவின் கார், அதன் பிறகு அவரது வீட்டுக்குள் செல்வதில்லை. நேராகப் பயணிக்க ஆரம்பித்தது. ஆனால், செல்வேந்திரன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கட்சிக் கூட்டங்களுக்கும், இலக்கிய கூட்டங்களுக்கும் செல்ல ஆரம்பித்தார். பெரும்பாலும் பேருந்தில்தான் பயணிப்பார்.

திருச்சி திமுகவில் செல்வேந்திரன் அலை சற்று ஓய்ந்தாலும் அவர் யாரையும் எதற்காகவும் நம்பியிருக்கவில்லை. அவர் வேலையை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவருக்கு இதயத்தில் பிரச்சினை வந்தது. நட்பும் பாசமும் நேருவை இழுக்க, சிகிச்சை முழுவதையும் உடன்நின்று நேருதான் கவனித்தார். இருவருக்கும் இடையில் சிலர் நிறுத்திவைத்த நிழல் திரை விலகியது.

கருணாநிதி இருக்கும்போது ஒவ்வொருமுறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாகும்போதெல்லாம், அந்த இடத்துக்கு மறக்காமல் அடிபடும் பெயராக செல்வேந்திரன் இருந்தார். ஆனால் மகனோ, மகளோ யாரோ அழுத்தம் கொடுத்தார்கள் என்று அவர்களுக்கோ, அவர்களின் சிபாரிசுக்கோ வாய்ப்பளித்துவிடுவார் கருணாநிதி. தலைமை செய்யவில்லை என்றாலும் நேரு செய்திருக்கலாம் என்பது செல்வேந்திரனைத் தெரிந்தவர்களின் ஆதங்கம். நேரு கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, செல்வேந்திரனுக்கு தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் தலைவர் உள்ளிட்ட எவ்வளவோ பொறுப்புகளை அளித்திருக்கலாம் என்பது அவர்களின் ஆதங்கம்.

நேருவுடன் செல்வேந்திரன்

ஆனால், அது மட்டுமல்ல... அதையும் தாண்டி செய்வதற்கு நேரு தயாராகவே இருந்தார், செல்வேந்திரன்தான் அவற்றையெல்லாம் விரும்பவில்லை என்கிறார்கள் நேரு தரப்பில். செல்வேந்திரன் ஒருபோதும் தனக்கு பதவி வேண்டும், பொறுப்பு வேண்டும் என்று கேட்டதேயில்லை. அப்படி கேட்காததாலேயே அவரை அப்படியே விட்டுவிட்டார்கள். ஆனாலும், செல்வேந்திரனுக்கு செய்ய வேண்டிய கடமை தனக்கு இருப்பதை நேரு உணர்ந்திருக்கிறார்.

பத்து ஆண்டுக்கும் மேலாக செல்வேந்திரன் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கிறார் என்றாலும், நேரு அவரை அடியோடு மறந்துவிடவில்லை. அவரது பிறந்தநாள் போன்ற விசேஷங்களுக்கு தனது ஆதரவாளர்களோடு சென்று அவரை சந்தித்து வாழ்த்துப் பெறுவதும், மற்ற தொண்டர்களுக்கு செய்யும் வழக்கமான மரியாதைகளை செல்வேந்திரனுக்கும் செய்து வருவதும் இன்றளவும் தொடர்கிறது.

இப்போது, செல்வேந்திரனின் மகன் எழில்மாறன் நேருவின் நெருக்கமான வட்டத்தில் இருக்கிறார். அவருக்கு கட்சிப் பொறுப்பு விரைவில் வழங்கப்படும் என்று நேரு உத்தரவாதம் அளித்திருப்பதாகச் சொல்கிறார்கள். நடப்பவை அத்தனையையும் பார்த்துக்கொண்டு ஆரம்பகால கட்டத்தை அசைபோட்டவாறே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது வயது முதிர்ந்த அந்த திராவிடச் சிங்கம்.

x