திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை, அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 14 மேஜைகளில் 14 சுற்றுகளாக நடைபெற்றுவருகிறது. இதில். திமுக 12 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது. அதிமுக ஓர் இடத்திலும், பாஜக ஓர் இடத்திலும் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.
17-வது வார்டில் வெற்றிபெற்ற அந்த பாஜக வேட்பாளர் பெயர், தனபாலன். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவரான இவர், சொந்தச் செல்வாக்குள்ளவர். எனவே, கட்சி சார்பற்றவர்களின் வாக்குகளால்தான் அவர் வெற்றிபெற்றார் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். எப்படியிருந்தாலும், பாஜகவின் முதல் வெற்றி இது என்பதால், அக்கட்சியினர் இந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதேபோல மதுரை மாநகராட்சியிலும் 86வது வார்டு பாஜக வேட்பாளர் பூமா ஜனா ஸ்ரீ வெற்றிபெற்றுள்ளார். திமுக வேட்பாளரை விட 190 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று அவர் வெற்றியைப் பதிவுசெய்துள்ளார். மதுரை மாநகராட்சியைப் பொறுத்தவரையில் ஜனசங்கம் காலத்திலேயே (அன்றைய) பாஜக கவுன்சிலர்கள் வெற்றிபெற்ற வரலாறு உண்டு என்றாலும் கூட, கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவுக்கு கிடைத்த முதல் வெற்றி இது.