திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை, வண்ணாரப்பேட்டை 49-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இளைய அருணா தலைமையில் திமுகவினர் அந்த வார்டுக்கு உட்பட்ட வாக்குசாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டுப்போட முயற்சிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் அங்கு வந்தனர். அப்போது, இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், திமுகவினர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநர் ஜெகன், பாஜக பிரமுகர் ராமையா ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள், திமுக நிர்வாகி நரேஷை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுக நிர்வாகி நரேஷ் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் தண்டையார்ப்பேட்டை போலீஸார், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல், ஆபாசமாக பேசுதல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உட்பட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தண்டையார்பேட்டை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.