அரசு காலி பணியிடங்களில் ஓய்வூதியரை நியமிக்க கூடாது: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை


சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்கள் டிஎன்பிஎஸ்சி, மருத்துவ தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் போன்றவை மூலமாகவோ அல்லது பத்திரிகை விளம்பரம் மூலமாகவோ நிரப்பப்படும்.

ஆனால் தலைமைச் செயலகத்தில், சார்புச் செயலர் நிலை முதல் செயலர் நிலை வரை ஓய்வு பெற்றவர்கள் அதே பணியில் அமர்த்தப்படுகின்றனர். 65-வயதைத் தாண்டியவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர, அனைத்துத் துறைகளிலும் கடைநிலை ஊழியர்முதல் உதவியாளர் பதவி வரையிலான பணியிடங்கள் ஒப்பந்தஅடிப்படையில் நிரப்பப்படுகின்றன. பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்பப்படுகின்றன. இதன் காரணமாக, அங்குள்ளவர்களுக்கு பதவிஉயர்வு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஓய்வுபெற்றவர்களை மாநில நெடுஞ்சாலை ஆணைய நிர்வாகிகளாக நியமிக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதற்கான அறிவிப்பு தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்பு வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வருகின்றன. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஓய்வு பெற்றவர்களை அரசு நியமிக்கும்போது அதில் அரசியல் கலந்துவிடும். அவர்கள் ஏதாவது தவறு இழைத்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கமுடியாது. பணியில் உள்ளவர்களுக்கான பதவி உயர்வு பறிபோகும். இதன் விளைவாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில், பணியில்உள்ளவர்கள் மட்டுமே நிர்வாகிகளாக நியமிக்கப்படும் நிலையில், திமுக அரசு ஓய்வு பெற்றவர்களை நியமிப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணியில் உள்ள திறமையானவர்கள் பதவி உயர்வுக்காகவும், இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புக்காகவும் காத்துக் கொண்டிருக்கையில், ஓய்வு பெற்றவர்களை அரசுப் பணிகளில் நியமிப்பது கடும் கண்டனத்துக்குரியது. இது இயற்கை நியதிக்கு எதிரானது.

எனவே முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஓய்வுபெற்றவர்களை பணியிலிருந்து உடனடியாக நீக்கிவிட்டு, அந்த இடங்களை பதவி உயர்வு மூலம் பணியில் உள்ளவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். இதன்மூலம் வரும் காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையில் நியமிப்பதை கைவிட வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணைய நிர்வாகிகளாக பணியில் உள்ளவர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

x