முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட வழக்கில் ஏபிவிபியினர் 32 பேருக்கு ஜாமீன்


முதல்வர் வீட்டை முற்றுகையிட்டபோது...

தமிழக முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட வழக்கில் கைதாகி சிறையில் வைக்கப்பட்ட ஏபிவிபி அமைப்பினர் 32 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘தஞ்சாவூர் மாணவி மரணம் தொடர்பான விசாரணை நியாயமாக நடைபெற, தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும், கட்டாய மதமாற்றத்தை தடுக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏபிவிபி அமைப்பினர் கடந்த 17-ம் தேதி சென்னை, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தமிழக முதல்வரின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த 35 பேரை, தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். கைதான 35 பேரில் 3 பேர் சிறுவர்கள் என்பதால், அரசினர் கூர்நோக்கு இல்லத்திலும் மீதமுள்ள 32 பேர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் கைதான 32 பேரில் 12 பேர் பெயரை மாற்றி, போலியான முகவரியை கொடுத்தது நீதிமன்ற காவலுக்காக மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தும் போதுதான் தேனாம்பேட்டை போலீஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து தேனாம்பேட்டை போலீஸார், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த 12 பேர் மீது பொய்யான ஆவணத்தை புனைதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் மற்றொரு வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த 32 பேர், ஜாமீன் கோரி எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. ஏபிவிபி அமைப்பினர் சார்பில் வழக்கறிஞர் பால்கனகராஜும், அரசு தரப்பில் வழக்கறிஞர் வாஷிங்டனும் ஆஜராகி வாதாடினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோதண்டராஜு, 32 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், “எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைக்க வேண்டுமென்றும், மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது” என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 32 பேரில் 12 பேர் மீது மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளதால், 12 பேர் சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

x