கடன் தர மறுக்கும் வங்கிகள்: செங்கல்பட்டு ஆட்சியரிடம் திருநங்கைகள் முறையீடு


செங்கல்பட்டு: சுய தொழில் தொடங்க வங்கிகள் தங்களுக்கு கடன் தர மறுப்பதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்காக சிறப்பு முகாமில் ஆட்சியர் ச.அருண்ராஜிடம் திருநங்கைகள் முறையிட்டனர்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை போன்றவற்றை வழங்கும் திருநங்கைகள் நலனுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த முகாமில் பங்கேற்ற திருநங்கைகளுடன் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உரையாடினார். அப்போது அவர்கள் தங்களுக்கு சொந்தமாக வீடுகள் இல்லை என்றும் வீட்டு மனைகள் ஒதுக்கி இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மேலும், சுய தொழில் தொடங்க வங்கிகளுக்கு சென்றால் வங்கிகளில் தங்களுக்கு கடன் உதவி அளிக்க மறுப்பதாகவும் ஆட்சியரிடம் முறையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், “மனு அளிப்பவர்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது வீட்டுமனை ஒதுக்கி பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுய தொழில் தொடங்க முன்வரும் திருநங்கைகளுக்கு உரிய கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து திருநங்கைகளுக்கு அரசின் சார்பில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து அரசு அலுவலர்கள் முறையாக விளம்பரப்படுத்துதல் வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தினார். பின்னர், விண்ணப்பித்த 10 திருநங்கைகளுக்கு உடனடியாக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார். மகளிர் திட்ட இயக்குநர் மணி, மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.