சென்னை: தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்பட மாட்டாது. அது தொடர்ந்து வழங்கப்படும் என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒரே இணைப்பாக இணைக்கப்படுவதுடன், இணைக்கப்பட்ட இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது. இத்தகவல் உண்மைக்குப் புறம்பானது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சமூக வலைதளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தியானது உண்மை நிலைக்கு மாறானது. வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு வழங்கப்படும் 100 யூனிட்இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின்இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளபடுகிறது.
இதேபோல், வீட்டுப் பயன்பாட்டுக்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொதுப் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றதுக்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பைத்தடுக்கும் நோக்கிலேயே இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே, வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து வழங்கப்படும்