கொங்கு மண்டலத்திலும் திமுக கூட்டணியே கொடிநாட்டும்!


உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மட்டும் 70 வார்டுகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி. அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கொங்கு பகுதியில் 15 நாட்கள் பிரச்சாரத்துக்குச் சென்றவர் என்கிற முறையில், வாக்காளர்களின் மனநிலை குறித்தும், பிற பிரச்சினைகள் குறித்தும் 'காமதேனு' சார்பில் அவரிடம் பேசினோம்.

வாக்காளர்களைச் சந்தித்த அனுபவத்தில் இருந்து சொல்லுங்கள்... உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்?

திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும். காரணம், மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். யாருக்கு வாக்களித்தால், நம்முடைய அடிப்படை வசதிகள் நிறைவேறும், தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று வாக்காளர்களிடம் நல்ல புரிதல் இருக்கிறது. அதிமுகவினர் வென்றால், வீட்டைவிட்டு வெளியே வருவார்களா என்பதே சந்தேகம்தான் என்கிறார்கள் வாக்காளர்கள். அதிமுக எம்எல்ஏக்களுக்கு வாக்களித்து, அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்.

கொங்கு மண்டலத்தில் பிரதான சாலைகள் பளபளவென தெரிந்தாலும், தெருக்களுக்குள் சென்றால் எந்த அடிப்படை வசதியுமே இல்லை. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் கோடி கோடியாக திட்டம் தீட்டி கொள்ளையடித்திருக்கிறார்களே தவிர, சாதாரண சாலை, கழிவுநீர் பிரச்சினையைக்கூட அதிமுகவினர் தீர்க்கவில்லை. இன்னொரு விஷயம், திமுக அரசுக்கு எந்தக் கெட்டபெயரும் இல்லை. பொங்கல் பொருட்கள் வழங்கியதில் சில புகார்கள் வந்தன என்றாலும், ஒருசில ரேஷன்கடைகளில்தான் அப்படியான தவறுகள் நடந்திருக்கிறதே தவிர, ஒட்டுமொத்தமாக குறை சொல்ல முடியாது. பெண்களுக்கு மாதந்தோறும் தருவதாகச் சொன்ன ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என்பதைப் பிரச்சினையாக்கினார்கள். அதையும்கூட விரைவில் தரப்போவதாக அறிவித்துவிட்டார் முதல்வர். எனவே, கள நிலவரம் திமுக அணிக்கே சாதகம்.

கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை, சேலம் மாநகராட்சிகளில் அதிமுக வலிமையாக இருப்பதாகச் சொல்கிறார்களே, உண்மையா?

இல்லவே இல்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கொங்கு மண்டலத்தில் அதிமுக கணிசமாக வெற்றிபெறக் காரணம், மகளிர் ஓட்டு. லேடீஸ் பூத்களில் எல்லாம் ஓட்டு எண்ணும்போது, அத்தனை பூத்களிலும் அதிமுகவுக்கே அதிக ஓட்டுகள் பதிவாகியிருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்தத் தேர்தலில் பெண்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க சில காரணங்கள் இருந்தன. (முதல்வரின் தாயார் பற்றி ஆ.ராசா அவதூறாகப் பேசியதாக செய்யப்பட்ட பரப்புரை). ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எல்லாம் மாறிவிட்டது. குறிப்பாக, பேருந்தில் பயணம் செய்ய மகளிருக்கு கட்டணமில்லை என்கிற திட்டமும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்கிற அறிவிப்பும் பெண்களின் எண்ணத்தை மாற்றியிருக்கிறது. எனவே, இம்முறை கொங்கு பெல்ட் முழுக்கவே திமுக கூட்டணியே வெற்றிக்கொடி நாட்டும்.

நீட் பிரச்சினை உள்ளாட்சித் தேர்தலிலும் பேசுபொருளாக இருக்கிறதே? தேர்தல் நெருக்கத்தில், நீட் தேர்வை கொண்டுவந்ததால்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் 1806 பேருக்கு சீட் கிடைத்திருப்பதாக பாஜக விளம்பரம் கொடுத்திருந்ததே?

உள்ளாட்சித் தேர்தலில் நீட்டின் தாக்கம் பெரிதாக இல்லை. அதே நேரத்தில் பாஜக கொடுத்த விளம்பரம் அபாண்டமானது என்கிற புரிதலும் மக்களுக்கு இருக்கிறது. நீட் தேர்வு வந்த பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 10, 20 பேருக்குத்தான் மெடிக்கல் சீட் கிடைத்தது. 7.5 சதவீத தனி ஒதுக்கீடு வந்த பிறகுதான் 1806 பேருக்கு சீட் கிடைத்திருக்கிறது. நீட்டை ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்த்தாலும், சட்டப்பேரவைத் தீர்மானம் போட்டாலும் பாஜக விலக்கு தரப்போவதில்லை. எனவே, சட்டப் போராட்டம் ஒரு பக்கம் நடக்கட்டும். இன்னொரு பக்கம், நீட்டை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையை எடுப்போம் என்று நான் சட்டப்பேரவையிலேயே சொன்னேன். அரசுப் பள்ளி மாணவர்களின் ஒதுக்கீட்டை 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்த வேண்டும், மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கிற மாணவர்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்திவருகிறோம்.

கொங்கு மண்டலத்தில் பாஜக கணிசமான வெற்றியைப் பதிவுசெய்யும் போல் தெரிகிறதே..?

வாய்ப்பே இல்லை. கோவை நகரில் மட்டும், அதுவும் குஜராத்திகள், ராஜஸ்தானியர்கள் அடர்த்தியாக வாழ்கிற இரண்டு மூன்று வார்டுகளில் வேண்டுமென்றால் பாஜக கணிசமாக ஓட்டு வாங்கும். அதுவும் ஜெயிக்கவெல்லாம் முடியாது.

கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணியும், இப்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜியும் இறங்கி வேலை செய்கிறார்கள். “கரூர்காரருக்கு இங்கே என்ன வேலை?” என்று வானதி சீனிவாசன் கேட்பதுபோலத்தான், கோவைக்காரர்களும் நினைக்கிறார்களா?

தேர்தல் நேரத்தில் அவருக்கு இங்கென்ன வேலை, இவருக்கு அங்கென்ன வேலை என்றெல்லாம் யாரும் கேட்பதில்லை. திமுக அமைச்சர் சக்கரபாணி கோவையை மையமாக வைத்துத்தான் செயல்படுகிறார். அவரை யாரும் கேட்கவில்லையே? தேர்தல் பணிக்காக வந்த செந்தில்பாலாஜியைப் பார்த்து மட்டும் பதற்றப்படுகிறார்கள் என்றால், அவர் நன்றாக வேலை பார்க்கிறார், கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்துகிறார் என்பதுதான் பொருள். அதிமுகவிலோ தலைவரும், இரண்டாம் கட்டத் தலைவர்களும்தான் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். தொண்டர்கள் மத்தியில் உற்சாகமே இல்லை. எனவேதான், ஒரே நாடு ஒரே தேர்தல், 6 மாதத்தில் ஆட்சி மாறிவிடும் என்று எதை எதையோ பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்த முயற்சிக்கிறார் பழனிசாமி.

கோவை குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவு மண்டபம் கட்டுவோம் என்று அண்ணாமலை கொடுத்த வாக்குறுதியை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் கோவையில் இனி எடுபடாது. கோவை என்றில்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் வன்முறையை விரும்புவதில்லை. தமிழ்நாட்டில் இப்போது சாதிப் பிரச்சினையோ, மதப் பிரச்சினையோ இல்லை. எப்படியாவது பிரச்சினையை உருவாக்கி, குளிர்காயலாம் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள். மதப் பிரச்சினையில் சின்ன துரும்பு கிடைத்தால்கூட அதைத் தூணாக்க முயற்சிக்கிறார்கள். அண்ணாமலை எதற்கெடுத்தாலும் மதம், மதம் என்று பேசுவதை மக்கள் ரசிக்கவில்லை. 2014 தேர்தலில் இவர்கள் வளர்ச்சியைச் சொல்லித்தானே ஓட்டுக்கேட்டார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு ஏன் அதைப்பற்றிப் பேசாமல், எப்போதும் மதம் பற்றியே பேசுகிறார்கள் என்று சாமானிய மக்களும் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

பாஜகவை நீங்கள் பொருட்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், இன்று களத்தில் நிற்கிற கட்சியாக அதுதானே இருக்கிறது? முதல்வர் வீட்டையே பாஜக மாணவர் பிரிவினர் (ஏபிவிபி) முற்றுகையிட்டிருக்கிறார்களே?

நாடு முழுக்க அவர்கள் இப்படியான முரட்டு அரசியலைத்தான் செய்கிறார்கள். இப்போது தமிழ்நாட்டிலும் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், உண்மையில் இவர்களுக்கு நேர்மையான நோக்கமோ, உண்மையான தைரியமோ கிடையாது. அப்படி இருந்திருந்தால், போலீஸாரிடம் போலியான முகவரியைக் கொடுத்திருக்க மாட்டார்கள். இதிலிருந்தே அவர்கள் மாணவர்கள்தானா என்கிற சந்தேகமும் வருகிறது. தேவையில்லாமல் போர்ஜரி வழக்குக்கு ஆளாகியிருக்கிறார்கள். மறுபடியும் சொல்கிறேன்... வடமாநில அரசியல் எல்லாம் இங்கே எடுபடாது. இப்படியான வன்முறையில் இறங்கினால், பாஜகவுக்கென கொஞ்சம் நஞ்சம் இருக்கிற வாக்குகளும் பறிபோய்விடும்.

x