மதுரை கோயில் சொத்தை குஜராத்தில் இருந்தே போலியாகப் பத்திரப்பதிவு செய்துவிடுவார்கள்!


பத்திரிகையாளர்களிடம் பேசும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

‘ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு திட்டம்’ நடைமுறைக்கு வந்தால், மதுரை கோயில் சொத்தை குஜராத்தில் இருந்தே போலியாகப் பத்திரப்பதிவு செய்துவிடுவார்கள் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், இன்று மதுரை காக்கைப்பாடினியார் மாநகராட்சிப் பள்ளியில் வாக்களித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அமைச்சர் சொன்ன பதில்களும் வருமாறு:-

தமிழக சட்டப்பேரவையை முடக்குவோம் என்று பழனிசாமி சொல்லியிருக்கிறாரே?

அரசுக்கு எதிராக வாக்களித்த 11 பேரை சட்டமன்றத்துக்குள் வைத்துக்கொண்டு, அரசுக்கு எதிராகப் பேசிய 18 பேரை தகுதி நீக்கம் செய்து ஜனநாயகப் படுகொலை செய்து, 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்தியவர்தான் பழனிசாமி. உள்ளாட்சித் தேர்தலைக்கூட நடத்தாமல், அவற்றை முடக்கிவைத்தவர், ஜனநாயக மரபுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை ஆட்சியை முடக்குவேன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ வந்தால் சாத்தியமாகும் என்கிறார்களே?

கொஞ்சமாவது அடிப்படை சட்ட அறிவு இருப்பவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள். ஒரே நாடு ஒரே தேர்தலும் சரி, மற்ற திட்டங்களும் சரி அப்படியெல்லாம் வெற்றிபெறாது. உதாரணமாக, ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு என்கிறார்கள். மதுரையில் உள்ள இடங்களை மதுரையில் பத்திரப்பதிவு செய்வதிலேயே கண்ணாபின்னாவென்று பிராடு நடக்கிறதா இல்லையா? கோவில் நிலத்தை எல்லாம் யாரோ ஆக்கிரமிப்பு செஞ்சு, பத்திரப்பதிவு செய்திருக்கிறார்களா இல்லையா? மதுரையில் உள்ள நிலமே யாருடைய நிலம் என்பதை உறுதிசெய்வதற்கு அந்தத் துறைக்குத் தகவல் பத்தவில்லை என்கிறபோது, ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு திட்டம் எப்படி சாத்தியமாகும்? குஜராத்தில் இருந்து யாரோ ஒருவர் மதுரை கோயில் நிலங்களை தன்னுடைய பெயரில் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துவிட்டால், நம்மால் என்ன செய்ய முடியும்? முட்டாள்தனமானப் பேச்சு இது.

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் பல இடங்களில் பணம் கொடுப்பதாக அதிமுகவினர் புகார் சொல்கிறார்களே?

ஓட்டுக்குப் பணம் கொடுக்க மாட்டேன் என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டு, மக்களிடம் ஓட்டுக்கேட்டவன் நான். ஒவ்வொரு முறையும் அப்படிச் சொல்லியே, நேர்மையான முறையில் ஜெயித்தவன் நான். எனக்குத் தெரிந்து ஓட்டுக்கு நாங்கள் பணம் கொடுக்கவில்லை. அவர்கள் புகார் கூறுகிறார்கள் என்றால், பணம் கொடுத்த அனுபவம் இருப்பதால், எப்படிப் பணம் கொடுக்க வேண்டும் என்று தெரியும் என்பதால், அவர்கள் அப்படிச் சொல்கிறார்களோ என்னவோ?

அமைச்சர் வாக்களிக்க வந்தபோது..

ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பிரச்சினை செய்கிறார் என்றெல்லாம் பாஜகவினர் சொல்கிறார்களே உண்மையா?

அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல், சரியான கணக்கு வழக்கு இல்லாமல், நாளை நிரூபிக்க முடியாத கருத்தை எல்லாம் பேசுவதுதான், இந்த மாதிரியான பேச்சு. ஜிஎஸ்டி கூட்டத்தில் உரிய ஆதாரங்களுடன் நான் பேசியிருக்கிறேன். வெற்றுக்கூச்சல் போடவில்லை. எனது கருத்தைப் பார்க்காமல், பிரச்சினை செய்கிறார், அது செய்கிறார் என்று சொல்பவர்கள் பிறகேன் என்னை ஜிஎஸ்டி வரி சீரமைப்புக் குழுவில் என்னை நிரந்தர கமிட்டி உறுப்பினராகப் (ஸ்டென்டிங் கமிட்டி) போட்டார்கள்? ஊடகங்களில் சிலர் வதந்தியாக எதையாவது பேசியிருக்கலாம், எழுதியிருக்கலாம். என்னைப் பொறுத்தவரைக்கும் ரொம்பத் தெளிவாகச் சொல்கிறேன். ஒன்றிய நிதி அமைச்சராக இருந்தாலும் சரி, ஒன்றிய நிதித் துறை செயலராக இருந்தாலும் சரி, ஜி.எஸ்.டி. கமிட்டி கன்வீனராக இருக்கிற வருவாய்த் துறை செயலராக இருந்தாலும் சரி, நிதித் துறையில் இருக்கிற எந்த அதிகாரியாக இருந்தாலும் சரி அவர்களுக்கு உண்மை தெரியும். பல மாநிலங்களின் முதல் அமைச்சர்கள், துணை முதல்வர்கள், நிதி அமைச்சர்கள், அமைச்சர்கள் அனைவரும் பரஸ்பர மரியாதையுடன் நல்ல பண்புடன் பழகி, முக்கியமான கருத்துகளை விவாதித்து, நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுகிறோம். நேற்று முன்தினம் நடந்த சுற்றுச்சூழல் சார்ந்த கூட்டத்தில் நானும், மகாராஷ்டிரா சுற்றுச்சூழல் அமைச்சரும், மேகாலயா சுற்றுச்சூழல் அமைச்சரும் பங்கேற்றுப் பேசினோம். அந்தக் கூட்டத்தில் 3 பேரும் வெவ்வேறு கட்சிகள் என்றாலும், இந்தப் பிரச்சினையில் செயல்பட வேண்டியது மாநிலங்கள், மாவட்டங்கள், உள்ளாட்சிகள்தான் என்று ஒரே மாதிரியாகவே கருத்துச் சொன்னோம். இதைவைத்துத்தான் சிஸ்டத்தைத் திருத்த முடியும். ஒரே நாடு, ஒரே அதிகாரி, ஒரே திட்டம் என்று டெல்லியில் இருந்தே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது என்று சொன்னோம். இத்தனைக்கும் மேகாலயா சார்பில் பங்கேற்றவர், அம்மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆதரவுடன் முதல்வராக இருப்பவரின் அண்ணன். கட்சிகள் வேறு என்றாலும், உண்மை மாறாது. உண்மை உண்மைதான். ஜி.எஸ்.டி. நிதியை சில நேரங்களில் சரியான நேரத்தில் தந்திருக்கிறார்கள். சில நேரங்களில் ரொம்பத் தாமதமாகத் தருகிறார்கள்.

பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்?

மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டால், அதை செயல்படுத்துகிற பொறுப்பு எனக்குண்டு. அவரது கட்டளையை நிறைவேற்றுவதுதான் எங்கள் வேலை. அந்த நிதி உதவியை எப்போது வழங்க வேண்டும் என்று முதல்வர் சொல்கிறாரோ, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுதான் என்னுடைய கடமை. அதைச் செய்வேன்.

இந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டாவது, பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டாக இருக்குமா?

தமிழ்நாட்டின் நிதி நிலைமை, கலைஞர், ஜெயலலிதா போன்ற வலுவான தலைமைகள் இருந்தபோது சரியாக இருந்தது. பொறுப்புள்ள நிதி மேலாண்மையை தமிழ்நாடு மேற்கொண்டது. ஆனால், அதன் பிறகு வால்கள் பொறுப்புக்கு வந்தபிறகுதான் எல்லாச் சீரழிவும் நடந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எல்லாவற்றையும் படிப்படியாக சரி செய்துகொண்டிருக்கிறோம். பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, மகளிர் குழுவினரின் கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறோம். சொல்லை அல்ல, செயலை வைத்து ஒரு அரசை மதிப்பிட வேண்டும். எங்கள் செயல்பாட்டின் விளைவைப் பார்த்துவிட்டு எங்கள் செயல்பாட்டை மதிப்பிட வேண்டும். நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறோம் என்கிற தகவல் விரைவில் உங்களுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

x