தேர்தல் புறக்கணிப்பு; வீடுகளில் கறுப்புக் கொடி


பரமத்திவேலூர் பேரூராட்சி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை பரமத்திவேலூர் பேரூராட்சி 2வது வார்டு மக்கள் புறக்கணிப்பு செய்தும், வீடுகளில் கறுப்புக் கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டபோது 3வது வார்டு 2வது வார்டாக மாற்றப்பட்டது. தவிர, வார்டுக்கு உட்பட்ட ராஜாநகருக்கான வாக்குச்சாவடி 3 கி.மீ. தள்ளி அமைக்கப்பட்டது. இதனால், ராஜாநகர் பகுதி மக்கள் தேர்தல் சமயங்களில் நீண்ட தூரம் சென்று வாக்களித்து திரும்ப வேண்டிய நிலை உருவானது.

தேர்தல் புறக்கணிப்பு

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும்படி சம்மந்தப்பட்ட ராஜாநகர் மக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்ததுடன் நேரிலும் பலமுறை தெரிவித்துள்ளனர். எனினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் அதிருப்தியடைந்த ராஜாநகரைச் சேர்ந்த மக்கள் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தனர்.

இதன்படி இன்று நடைபெற்று வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை குப்புச்சிபாளையம் 2வது வார்டு ராஜாநகர் மக்கள் புறக்கணிப்பு செய்தனர். மேலும், வீடுகளிலும் கறுப்புக் கொடியேந்தி தங்களது அதிருப்தியை வெளியப்படுத்தினர். வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவா்த்தை நடத்தினர். எனினும், வாக்குச்சாவடி மாற்றினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் எனக் கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x