பிஸ்கட் போடச் சென்ற சிறுவனை கடித்துக் குதறிய தெரு நாய் @ சென்னை


நாய் கடித்ததில் காயமடைந்த சிறுவன் சாயீஸ்வரன். | அடுத்தப் படம்: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா காயமடைந்த சிறுவனை பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

சென்னை: சென்னை மயிலாப்பூரில், தெருநாய் கடித்து காயமடைந்த 6 வயது சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிஸ்கட் போட நெருங்கி சென்றபோது நிகழ்ந்த சோகம் இது.

சென்னை மயிலாப்பூரில் நொச்சிகுப்பம் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (36). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சாயீஸ்வரன் (6) நேற்று இரவு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த தெரு நாய்க்கு பிஸ்கட் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த நாய் திடீரென சிறுவனை கடித்துக் குதறியுள்ளது. இதனால் சிறுவனின் முகம், கை மற்றும் தோள்பட்டையில் காயங்கள் ஏற்பட்டது.

சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பெற்றோர் உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாய் கடிக்கான மருந்துகள் இல்லை என தெரிவித்ததால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனுக்கு தடுப்பூசி போடப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரை கடிதம் அளித்தனர்.

இதையடுத்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு 3 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாநகராட்சி மேயர் பிரியா இன்று மதியம் நேரில் சென்று அந்தச் சிறுவனை பார்வையிட்டு நலம் விசாரித்தார். தொடர்ந்து சிறுவனுக்கு உயர்தர சிகிச்சை வழங்குமாறும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.

இச்சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த நாய் ஏற்கெனவே 2 முறை இங்குள்ளவர்களை கடித்திருந்திருக்கிறது. அது எங்களுக்கு தெரியவில்லை. நாய் கடித்த பின்னர் மகனை முதலில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குத் தான் அழைத்து சென்றோம். அங்கே நாய் கடிக்கான மருந்து இல்லை என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.

அங்கு தடுப்பூசி மட்டும் போட்டுவிட்டு அங்கிருந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரைக் கடிதம் அளித்தனர். குழந்தையை அழைத்துக் கொண்டு 4 மருத்துவமனைகளுக்கு மாறி மாறி சென்றது வேதனை அளிக்கிறது. எல்லா மருந்துகளும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிடைக்க வேண்டும்” என்றார்.

நுங்கம்பாக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறுமியை வெளிநாட்டு வகை நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நாய்களை வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் பல்வேறு கட்டுப் பாடுகளை சென்னை மாநகராட்சி விதித்தது. ஆனால், அவை முறையாக பின்பற்றப்படாததால், தற்போது மீண்டும் சிறுவனை நாய் கடித்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இது சென்னை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.