திருநெல்வேலி: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் மண்டலங்களில் பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியை அரசுப் போக்குவரத்து கழகம் கோரி இருப்பது தொழிற்சங்கங்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் மண்டலங்களில் பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை ஏற்பாடு செய்ய மனிதவள நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் வரவேற்கப்படுவதாக அரசுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் அதன் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அந்த ஒப்பந்த புள்ளி கோரும் அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் மண்டலங்களில் பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை ஏற்பாடு செய்ய தனியார் மனிதவள நிறுவனங்களிடம் இருந்து மின்னணு டெண்டர்கள் வரவேற்கப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்படிவங்களை இலவசமாக www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தப் படிவங்களை திருநெல்வேலி - தூத்துக்குடி ரோடு வி.எம்.சத்திரம் தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் வரும் ஜூலை 18-ம் தேதி காலை 10 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அன்று காலை 11 மணியளவில் ஒப்பந்தப் புள்ளி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் நியமனத்தை தனியார் வசம் கொடுக்கக் கூடாது என்று அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வரும் நிலையில் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு தொழிற்சங்கங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, “கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இதுபோன்ற ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு சேலம் அரசுப் போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மக்களவை தேர்தலுக்கு முன் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வந்தது.
அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பு அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது திருநெல்வேலி அரசுப் போக்குவரத்து கழகத்திலிருந்து ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியாகியுள்ளது” எனத் தெரிவித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளன பொதுசெயலர் ஆர்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்திட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவே கடந்த காலங்களில் பணியாளர்களை தேர்வு செய்து, 240 நாட்கள் பணிபூர்த்தியானவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படும் நடைமுறை இருந்து வந்தது. தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க அரசுப் போக்குவரத்து கழகம் முன்வந்துள்ளது. வியாபார உலகில் ஊதியம் குறைத்து கொடுக்க முன்வருவோர் ஒப்பந்தப்புள்ளியை பெறுவர்.
அவர்கள் தங்களது லாபம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டே ஒப்பந்த ஊழியருக்கு ஊதியம் வழங்குவார். இது ஊதிய சுரண்டலுக்கு வழிவகுக்கும். இடஒதுக்கீடு பின்பற்றப்படாது. மேலும், குறைந்தபட்ச ஊதிய சட்டம் புறக்கணிக்கப்படும். பணி நிரந்தரம் இருக்காது. பணியில் உள்ளவர்களுக்கு கழக அந்தஸ்து கிடைக்காது. எனவே, ஒப்பந்த முறையை கைவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமும், வாரிசு பணி மூலமும் ஓட்டுநர், நடத்துநர், தொழில் நுட்ப பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை நியமிக்க வேண்டும்” என்றார்.