உத்தரப்பிரதேசம், பஞ்சாப் தேர்தலில் பட்டியலின மக்களின் வாக்குகளை பெற தீவிரமாக முயற்சிக்கப்படுகிறது. இதற்காக நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட சந்த் ரவிதாஸ் கோயிலில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வருகை புரிந்தனர்.
உபியின் வாரணாசியிலுள்ள கோவர்தன்பூரில், 645 வருடங்களுக்கு முன் 1376 இல் பிறந்த சந்த் ரவிதாஸ், ஆன்மிகத் துறவியாக வளர்ந்தவர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் குருவாகக் கருதப்படுகிறார். இதனால், அவர் பிறந்த கோவர்தன்பூர் உள்ளிட்டப் பல இடங்களில் சந்த் ரவிதாஸுக்கு பல கோயில்கள் உள்ளன. சந்த் ரவிதாஸை பல்வேறு மாநிலங்களில் பல பெயர்களில் அழைக்கின்றனர்.
உபி, மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜாஸ்தானில் ராய்தாஸ் என்றழைக்கப்படுகிறார். பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் ரவிதாஸ் எனவும், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் ரோஹிதாஸ் என்றும் அழைக்கப்படுகிறார். கோவர்தன்பூரின் கிராமப்பஞ்சாயத்து தலைவராக இருந்த ரவிதாஸின் தந்தை சந்தோக் தாஸ், காலணிகள் தைக்கும் தொழிலாளி. அப்போது, சமூகத்தில் ஒரு மாற்றம் கொண்டு வருவதற்காக என ரவிதாஸ், தனது பெற்றோரை விட்டு விலகிச் சென்றார்.
நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்தவர், தனது பேனா முனையால் சமூகத்திற்காகப் பல புதிய ஆன்மிகக் கருத்துக்களை எழுதி வெளியிட்டார். இதன்மூலம், ரவிதாஸின் கொள்கைகளை சாதிமதப் பேதங்கள் இன்றி பல லட்சம் பேர் பின்பற்றத் துவங்கினர்.
இன்றும் தொடரும் ரவிதாஸின் புகழால் அவருக்கு பட்டியலின சமூகத்தினர் கோயில்களை கட்டி கும்பிட்டு வருகின்றனர். இதனால், தற்போது பஞ்சாப் மற்றும் உபியின் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், ரவிதாஸின் பிறந்தநாள் அதிக முக்கியத்துவம் பெற்று விட்டது. ரவிதாஸுக்காக நேற்று முன்தினம் டெல்லியின் கரோல்பாக்கில் உள்ள கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் நபராக சென்று வழிபட்டார். தொடர்ந்து அவர் ரவிதாஸ் பக்தர்களுடன் அங்கு அமர்ந்து பக்தி பாடல்களை பாடியும் மகிழ்ந்தார்.
இதையடுத்து, வாரணாசியில் ரவிதாஸ் பிறந்த இடத்திலுள்ள முக்கிய கோயிலுக்கு காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா வதேராவும் வந்திருந்தனர். பஞ்சாபின் முதல்வர் சரண்ஜீத் சன்னியும் இவர்களுடன் வந்து தன் சமூகக் குருவான ரவிதாஸை வழிபட்டார். இவர்கள் மூவரும் சுமார் இரண்டு மணி நேரம் ரவிதாஸின் கோயிலில் தங்கி அங்கு சமுதாயத்தினருடன் அமர்ந்து உணவும் அருந்தினர். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்பியான சஞ்சய்சிங்கும், ஆஸாத் சமாஜ் கட்சியின் தலைவரான சந்திரசேகர் எனும் ராவணும் இக்கோயிலுக்கு வந்திருந்தார்.
இவர்கள் அனைவருக்கும் முன்பாக பாஜக ஆளும் உபியின் முதல்வராக யோகி ஆதித்யநாத்தும் ரவிதாஸ் கோயிலுக்கு வந்து சென்றிருந்தார். இந்தமுறை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் ரவிதாஸ் பிறந்தநாள் முக்கியமாகி விட்டது. ஏனெனில், உபியில் சுமார் 32 சதவிகிதமும், பஞ்சாபில் சுமார் 35 சதவிகிதமுமாக பட்டியலின சமூகத்தினர் உள்ளனர். எனினும், இவர்களில் உள்ள பல்வேறு உட்பிரிவுகள் காரணமாக பல அரசியல் கட்சிகளுக்கு இடையே பிரிந்து நிற்பது கவலைக்குரியது.