கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார் பணியில் அமர்த்தப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதுகுறித்து கூறுகையில், “உள்ளாட்சித் தேர்தலுக்காக குமரி மாவட்டத்தில் 1,240 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதில் 800 பேர் ஓய்வுபெற்ற காவலர்கள், ஊர்க்காவல் படை, முன்னாள் ராணுவ வீரர்கள் ஆவர். மதுரை மாவட்டத்தில் இருந்தும், பட்டாலியன் காவலர்களும் தேர்தல் பணிக்காக கூடுதலாக வந்துள்ளனர். தேர்தலை சுமூகமாக நடத்த 155 பறக்கும் படைக்ளை அமைத்துள்ளோம். மாவட்டத்தில் எங்கு பிரச்சினை என்றாலும் இவர்கள் உடனடியாக அங்கே சென்றுவிடுவார்கள்.
பொதுமக்கள் எவ்வித அச்சமோ பதற்றமோ இல்லாமல் வந்து வாக்களிக்கலாம். தமிழகத்திலேயே குமரிமாவட்டத்தில் தான் ஊரகப் பகுதிகள் அதிகம். அதனால் இங்கு அதிகமான வாக்குச் சாவடிகளும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 173 வாக்குச்சாவடிகளை பதற்றமானவையாக வகைப்படுத்தியுள்ளோம். இதில் 55 பகுதிகள் வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் தலா மூன்று போலீஸார் கூடுதலாக பணியில் இருப்பார்கள். அத்தகைய வாக்குச்சாவடிகளின் அருகில் தான் பறக்கும்படையினர் இருப்பார்கள்” என தெரிவித்தார்.