திமுகவுக்கு ஆதரவாக கோவையில் பிரச்சாரம்; ருமேனியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவாரா நிகொய்டா?


நிகொய்டா ஸ்டெஃபன் மரியஸ்

திமுகவுக்கு ஆதரவாக கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட, ருமேனியா நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் நிகொய்டா ஸ்டெஃபன் மரியஸ், குடியுரிமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

கோவையில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, நேற்று முன்தினம் ருமேனியா நாட்டைச் சேர்ந்த நிகொய்டா ஸ்டெஃபன் மரியஸ் பேருந்தில் ஏறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

தொழில் நிமித்தமாக கோயம்புத்தூர் வந்த நிகொய்டா, திமுக கட்சியின் மீது ஏற்பட்ட பற்றின் காரணமாக நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறி, பேருந்து நிலையம், மக்கள் கூடும் இடம் என எல்லா இடத்திலும் துண்டுப் பிரசுரம் விநியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும், ‘வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்வது, விசா விதிமுறை மீறல் எனவும் இது தொடர்பாக உடனடியாக சென்னையில் உள்ள குடியுரிமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என குடியுரிமை துறை அதிகாரிகள் கோவையிலுள்ள நிகொய்டாவுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பினர்.

குடியுரிமை துறை அதிகாரிகள் அனுப்பிய நோட்டீஸின் அடிப்படையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குடியுரிமை அலுவலகத்தில் இன்று(பிப்.18) நிகொய்டா விசாரணைக்கு ஆஜரானார்.

பொதுவாக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள், மதரீதியான பிரச்சாரம் மற்றும் அரசியல் ரீதியான பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்ற விதிமுறையின் அடிப்படையில்தான் விசா வழங்கப்பட்டு வருகின்றது. எனவே, விசா விதிமுறை மீறலில் ஈடுபட்ட நெகொய்டாவிடம் விசாரணை நடைபெறறு வருவதாக குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசா விதிமுறை மீறல் நடந்துள்ளது தெரியவந்தால், நிகொய்டாவை உடனடியாக அவருடைய நாட்டுக்கு அவர் திருப்பி அனுப்பப்படுவதுடன் 3 ஆண்டுகளுக்கு அவர் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

x