“போராட்ட குணம் இல்லாத உங்களுக்கெல்லாம் எதற்கு ஓட்டு?!” - தங்கர் பச்சான் ஆவேசம்


விருத்தாசலத்தில் நன்றி தெரிவித்த துண்டு பிரசுரத்தை வழங்கும் தங்கர்பச்சான்

கள்ளக்குறிச்சி: அக்கிரமங்களை எதிர்த்து போராட வேண்டிய நீங்கள் போராட்ட குணமே இல்லாதபோது உங்களுக்கெல்லாம் எதற்கு ஓட்டு என விருத்தாசலத்தில் இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த போது, திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் ஆவேசமடைந்தார்.

கடலூர் மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளராக களமிறங்கி, 3-வது இடத்தைப் பிடித்த திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் விருத்தாசலம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் அருகே பேசும்போது, ''நான் காலவேளையில் நடைபயிற்சி செல்லும்போது, சிலர் என்னிடம் நீங்கள் மிகவும் நல்லவர், எதற்காக அரசியலுக்கு வந்தீர்கள் என கேள்வி எழுப்பினர்.

அப்போது நான், அரசியல் ஒரு சாக்கடை தான். அதை நீங்களும் சரி செய்ய மாட்டீர்கள். அதை அப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்தால், முடிவு என்னவாகும். யார் தான் சரி செய்வது ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தால், தீர்வு கிடைக்காது என்பதால் தான் அதை சுத்தம் செய்ய நானே அரசியலுக்கு வந்தேன்.

இது என் மண், என் மக்கள் அவர்களுக்காக நான் குரல் கொடுப்பேன். இந்த நாடு குடிகார நாடாக மாறிவருகிறது. போதைப் பொருளின் இருப்பிடமாக மாறிவிட்டது. இன்னொரு புறம் மணல் திருட்டு என அக்கிரம சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த விருத்தாசலத்தில் கோயில் அருகே உள்ள சாலையை ஒருவழிச் சாலையாக மாற்றினால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். காவல் துறையினர் அதை செய்ய மாட்டார்கள். அதை எதிர்த்து நீங்களாவது போராட வேண்டாமா? போராட்ட குணம் இல்லாத உங்களுக்கெல்லாம் எதற்கு ஓட்டு?

தமிழகத்தில் 40-க்கு 40 வெற்றி பெறச் செய்துள்ளீர்கள். அவர்கள் மக்களவைக்குச் சென்று என்ன செய்யப்போகிறார்கள், வெளி நடப்புத் தான் செய்வார்கள். வேறொன்றும் செய்ய மாட்டார்கள். 2026-க்கு பிறகு தமிழகத்தில் மாற்றம் வரும். அந்த மாற்றத்தை நோக்கி நாங்களும் செயல்படுகிறோம்'' இவ்வாறு தங்கர் பச்சான் தெரிவித்தார்.

x