நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஓய்வுபெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர்!


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுதும் பாதுகாப்புப் பணிகளுக்காக 1,13,073 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வருகிற 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் 31,150 வாக்குச்சாவடிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, தகுந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே வாக்குப்பதிவு தொடர்பான நம்பிக்கையை வளர்க்கும் வகையில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்புகள் நடத்தியதுடன், தேர்தல் தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த தேர்தலின்போது நடைபெற்ற குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மேல்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் வெளிப்படையாகவும், அமைதியாகவும் நடைபெறும் வகையில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட 1,343 நிலைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் நிலவும் பகுதிகளுக்கு விரைந்து சென்று தீர்வுகாணும் வகையில், 846 அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத மதுபான விற்பனை, ஆயுதங்கள் கடத்துவது மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் வருவதைத் தடுக்கும் வகையில், 455 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடக்கும் வகையில், தாலுகா மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 17,788 காவல் அதிகாரிகளும், 71,074 ஆண் மற்றும் பெண் காவலர்களும், தமிழ்நாடு சிறப்பு படையைச் சேர்ந்த 9,020 காவலர்கள் உட்பட 97,882 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் 12,321 ஊர்க்காவல் படையினரும், 2,870 முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற காவலர்கள் என மொத்தம் 1,13,073 லட்சம் பேர் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்துக் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களும் கரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றத்தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைகளை தொடர்புகொண்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் தமிழக காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

x