கோவை: சைமா நடத்தும் டெக்ஸ்ஃபேர் சர்வதேச கண்காட்சி ஜூன் 21-ல் தொடக்கம்


கோவை பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள "சைமா" அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  "சைமா" தொழில் அமைப்பின் தலைவர் எஸ்.கே. சுந்தரராமன், துணைத் தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர்.

கோவை: தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) நடத்தும் டெக்ஸ்ஃபேர் சர்வதேச கண்காட்சி அவிநாசி சாலையில் உள்ள கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில் ஜூன் 21-ம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து "சைமா" தொழில் அமைப்பின் தலைவர் எஸ்.கே. சுந்தரராமன், துணைத் தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார் ஆகியோர் இன்று (ஜூன் 18) செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 1933-ம் ஆண்டு இந்தியாவின் முதல் நிதியமைச்சர், சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களால் கோவையில் தொடங்கப்பட்டது தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா). இது அனைத்து ஜவுளிப் பிரிவுகளையும் உள்ளடக்கி செயல் படுகிறது. கடந்த 2001-ம் ஆண்டு முதல் ‘டெக்ஸ்ஃபேர்’ என்ற பெயரில் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் சர்வதேச கண்காட்சியை சைமா நடத்தி வருகிறது.

ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாக உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அதன் உபயோகிப்பாளர்களான ஜவுளி தொழில் துறையினர் அனைவரையும் ஒரே கூரையின்கீழ் கொண்டு வந்து பரஸ்பரம் பயனடையச் செய்வதே இந்த கண்காட்சியின் நோக்கமாகும். அந்த வகையில், 14-வது கண்காட்சி ஜூன் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெறும். கண்காட்சி நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.

பல்வேறு நாடுகளில் இருந்து ஜவுளி இயந்திர உற்பத்தியாளர்கள், உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனத்தினர் இந்தக் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். இறக்குமதி பொருட்களுக்கு மாற்றாக உள் நாட்டிலேயே குறைந்த விலையில் இயந்திரங்களையும் உதிரிபாகங்களையும் உற்பத்தி செய்வோரை ஊக்குவிப்பதும் இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும். தொடக்க விழா ஜூன் 21-ம் தேதி கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும்.

கோவை எம்பி-யான கணபதி ப.ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கண்காட்சியை திறந்து வைக்கிறார். சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர், டாக்டர் கே.வி.ஸ்ரீனிவாசன் தலைமை வகிப்பார். இந்திய ஜவுளி கூட்டமைப்பின் தலைவர், ராகேஷ் மெஹ்ரா கௌரவ விருந்தினராக பங்கேற்க உள்ளார். மேலும் விவரங்களை www.simatexfair.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.