"பிரதமர் பதவிக்கென ஒரு சிறப்பு கண்ணியம் இருக்கிறது. தவறுகளை மறைக்க வரலாற்றைப் பழிக்கக் கூடாது” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 20-ல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், மன்மோகன் சிங் பேசிய காணொலியைக் காங்கிரஸ் கட்சி இன்று ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறது. அதில் பிரதமர் மோடியின் ஆட்சியை அவர்மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
“ஒருபக்கம் மக்கள் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இன்னொரு பக்கம், கடந்த ஏழரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இன்றைய அரசு, தனது தவறுகளை ஒப்புக்கொண்டு அவற்றைச் சரிசெய்வதை விட்டுவிட்டு, மக்களின் பிரச்சினைகளுக்கு முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவைக் குறைசொல்லிக்கொண்டிருக்கிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.
மேலும், “பிரதமர் பதவிக்கென ஒரு சிறப்பு கண்ணியம் இருக்கிறது. தவறுகளை மறைக்க வரலாற்றைப் பழிக்கக் கூடாது. நான் 10 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்தபோது, எனது செயல்களின் மூலம்தான் பேசினேன். உலகின் முன்னே, நாட்டின் கவுரவத்தை விட்டுக்கொடுத்ததில்லை. இந்தியாவின் பெருமையை நான் ஒருபோதும் பின்னடையச் செய்ததில்லை. பலவீனமானவர், மவுனமானவர், ஊழல்வாதி என்றெல்லாம் என் மீது தவறாகக் குற்றம்சாட்டிய பாஜக அதன் பி மற்றும் சி அணிகள் இன்றைக்கு நாட்டின் முன்னே அம்பலப்பட்டு நிற்கின்றன என்பதில் திருப்தியடைகிறேன்” என்று அவர் அந்தக் காணொலியில் கூறியிருக்கிறார்.
“பொருளாதாரக் கொள்கை குறித்து பாஜக அரசுக்கு ஒரு புரிதலும் இல்லை. பிரச்சினை நம் நாட்டுடன் முடிந்துவிடவில்லை. இந்த அரசு வெளியுறவுக் கொள்கையிலும் தோல்வியடைந்திருக்கிறது. சீனா நமது எல்லையில் அமர்ந்திருக்கிறது. ஆனால், சீன ஊடுருவல்களை மறைக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தலைவர்களை வலுக்கட்டாயமாகக் கட்டியணைப்பது, ஊஞ்சலில் ஆடுவது, அழைக்காமல் பிரியாணி விருந்துக்குச் செல்வது போன்றவற்றின் மூலம் வெளியுறவுக் கொள்கையை நடத்த முடியாது என்பதை பிரதமர் புரிந்துகொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்” என்றும் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.
அவரது இந்தக் காணொலியால் பாஜகவினர் கடும் கோபமடைந்திருக்கின்றனர். இதற்கிடையே, இந்திய எல்லையில் சீனா அமர்ந்திருப்பதாக மன்மோகன் சிங் சொன்னது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “இது அரசியல் அடிப்படையிலான கருத்து. கொள்கை சார்ந்ததல்ல” என்று கூறியிருக்கிறார்.