அதிமுகவினரின் வீடுகளில் தாங்களே மது பாட்டில்களைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, காவல் துறையினர் பறிமுதல் செய்தது போல் நாடகம் நடத்துவதாக, தளவாய் சுந்தரம் பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளார்.
அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்எல்ஏ இதுகுறித்து காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக காவல் துறை மாறிச் செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சியினர் மீது பொய்வழக்குப் போட பல்வேறு வீண் பழிகளையும் காவல் துறை சுமத்துகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சியின் வெற்றியைப் பறிக்க பொய்வழக்குகளை பதிந்து, மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி லாபம் தேடும் ஆளும்கட்சியின் முயற்சிக்கு காவல் துறை உடந்தையாக உள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
காவல் துறையினர் அதிமுகவினரின் வீடுகளுக்கு அத்துமீறிச் சென்று அவர்களே மதுபாட்டில்களை வைத்துவிட்டு, எடுப்பது போன்று நாடகத்தை அரங்கேற்றி பொய்வழக்குப் போட்டுவருகிறார்கள். ஆரல்வாய்மொழியில் சமீபத்தில் இப்படி 500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதைப் பற்றிக் கேட்டால், மேலிடத்து உத்தரவு என ஆரல்வாய்மொழி ஆய்வாளர் கூறுகிறார். இருந்தும், இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சும் இயக்கம் அதிமுக இல்லை. இரட்டை இலை பெருவாரியாக வெல்லும். மக்கள் எங்களுக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டனர்’’ என்றார்.