“உ.பி, பிஹார் மாநிலத்தவர் குறித்து சரண்ஜீத் சிங் பேசியதில் தவறு இல்லை” - பிரியங்கா காந்தி


உத்தர பிரதேசம், பிஹார், டெல்லியைச் சேர்ந்தவர்கள் குறித்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் பேசியது சர்ச்சையான நிலையில், அவர் தவறாக எதையும் பேசவில்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியிருக்கிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்.15) ரூப்நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பேரணியில் பேசிய சரண்ஜீத் சிங், உத்தர பிரதேசம், பிஹார், டெல்லியிலிருந்து வருபவர்கள் பஞ்சாபை ஆட்சிசெய்ய விடக்கூடாது எனக் கூறியது சர்ச்சையானது. ரூப்நகர் பேரணியின்போது பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டார். உத்தர பிரதேசம், பிஹார் மாநிலத்தவர் குறித்து சரண்ஜீத் சிங் சன்னி பேசியபோது அருகில் நின்ற பிரியங்கா அதைக் கைதட்டி வரவேற்றார்.

பிரதமர் மோடி இதைக் கடுமையாக விமர்சித்திருந்தார். “இதுபோன்ற பேச்சுகளால் யாரை இழிவுபடுத்த அவர்கள் முயற்சிக்கிறார்கள்? உத்தர பிரதேசம் அல்லது பிஹாரைச் சேர்ந்த நம் சகோதரர்கள் கடின உழைப்பில் ஈடுபடாத கிராமமே பஞ்சாபில் இருக்க முடியாது. பஞ்சாப் முதல்வர் அப்படிப் பேசியபோது, அவருக்கு அருகில் நின்று அவரது தலைவர் கைதட்டினார். ஒட்டுமொத்த நாடும் அதைப் பார்த்தது” என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், லூதியானாவில் இன்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரியங்கா காந்தி, “பஞ்சாபிகள்தான் பஞ்சாபை ஆள வேண்டும் என்பதுதான் சரண்ஜீத் சிங் சொன்னார். அவரது வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன. யாரும் உத்தர பிரதேசத்திலிருந்து வந்து பஞ்சாபை ஆள விரும்புவதாக நான் நினைக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, தனது சர்ச்சைப் பேச்சு தொடர்பாகக் காணொலிப் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார் சரண்ஜீத் சிங் சன்னி. “வெளியிலிருந்து வந்து இடையூறு செய்யும் துர்கேஷ் பதக், சஞ்சய் சிங், அர்விந்த் கேஜ்ரிவால் (ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள்) பற்றித்தான் அவ்வாறு பேசினேன்” என்று அதில் அவர் விளக்கமளித்திருக்கிறார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 20-ல் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

x