அங்கன்வாடி மைய எல்கேஜி, யுகேஜியில் மாணவர் சேர்க்கை கூடாது


(கோப்புப் படம்)

அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்ட 2,300 எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை மூட. பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆட்சியில் அரசு உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களில், சமூகநலத் துறையின்கீழ் இயங்கிவந்த அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அந்தப் பணியிடங்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்து நியமனம் செய்யப்பட்டனர். நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மழலையர் பள்ளிகளையும் கவனிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

ஆனால், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சரிவர கவனிக்காமல் இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கன்வாடி மையங்களில் ஆரம்பிக்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆகையால் நடப்பாண்டில் 2,300 மேற்பட்ட எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட கல்வித் துறை அலுவலர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை, மீண்டும் தொடக்கக் கல்வித் துறையில் 1 முதல் 5 வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியிட மாறுதல் வழங்குவதற்கு பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அந்தப் பணியிடங்கள் காலியாகும் நிலையில் அங்கன்வாடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

x