திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது!


திருநங்கைகள்

தமிழ்நாடு காவல் துறை அதிகாரிகள் நடைமுறை விதியில், ‘திருநங்கைகள் ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோரை தேவையில்லாமல் தொந்தரவு செய்யக்கூடாது’ என்று புதிய சட்டத் திருத்தம் அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த இரு பெண்கள் நட்பாக பழகத் தொடங்கினர். பின்னர், அந்த நட்பு காதலாக மாறியதை அடுத்து இருவரும் சேர்ந்து வாழ விரும்பினர். இருவரது பெற்றோர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களைப் பிரிக்க முயற்சித்ததால், இருவரும் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வேலை தேடி, பின்னர் சொந்தமாக தொழில் ஆரம்பித்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இருவரையும் காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்த நிலையில், தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக உள்துறை அமைச்சகம் புதிய சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அதில், தமிழ்நாடு காவல் துறை அதிகாரிகள் நடைமுறை விதிகளில் 24சி சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘உதவி ஆணையர் மற்றும் உதவி ஆணையருக்குகீழ் பணிபுரியும் காவல் துறையினர் திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என LGBTQIA பிரிவைச் சேர்ந்தவர்களை தேவையில்லாமல் தொந்தரவு செய்யக்கூடாது’ என்ற பிரிவைச் சேர்த்துள்ளனர்.

மேலும், காவல் துறையினர் சட்டபூர்வமான முறையில் இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு தமிழக அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. விசாரணையின் போது இந்த விதிமுறைகளை மீறும் காவல் துறையினர் மீது, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமின்றி இவர்களுக்காகப் போராடும் அமைப்பைச் சார்ந்தவர்களையும் தேவையில்லாமல் தொந்தரவு செய்யக்கூடாது என இந்த சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஓர் பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் போன்றோர் சாதாரணமாகவே காவல் துறையினரால் தவறாக நடத்தப்படுவதாகவும், அது தொடர்பான பல்வேறு புகார்கள் தமிழகம் முழுதும் தொடர்ந்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த சட்டத்திருத்த விதி வெளியிடப்பட்டுள்ளது. இவர்களை காவல் துறையினர் எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x