“அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு சிலிண்டர் விலையைக் குறைக்கும் அந்த இடத்துக்கு நாம் வந்துவிடுவோம்” என்று திமுக மகளிரணிச் செயலாளரும் மக்களவை எம்.பி-யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் இன்றோடு நிறைவடைகிறது. ஆளும் திமுகவின் பிரச்சார முகங்களாக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் பிரசாரம் மேற்கொண்டார். அடுத்து, உதயநிதி ஸ்டாலின் மாநிலத்தில் பரவலாகச் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கனிமொழி தூத்துக்குடி. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி என தென் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் களமிறங்கினார். ஒரு வார காலம் தென் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ஒவ்வொரு கூட்டத்திலும் வாக்காளர்களிடம் எதிர்கொண்ட முக்கியமான கேள்வி, ‘காஸ் சிலிண்டர் விலை எப்போது குறையும்?’ என்பதுதான்.
நடப்பது உள்ளாட்சித் தேர்தல். ஆனால், மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ள காஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் என்று கனிமொழியிடம் வாக்காளர்கள், குறிப்பாக பெண்கள் கேட்டது, அவரை சற்று அதிர்ச்சியுறச் செய்தது என்னவோ உண்மை. ஆனாலும், வாக்காளர்களின் இந்தக் கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் சளைக்காமல் பதில் சொன்னார் கனிமொழி. அப்படி தென்காசி பிரசாரத்தில் வாக்காளர்களுக்கு அவர் அளித்த பதில் இதுதான்.
“காஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் என்று இங்கிருக்கும் நம்முடைய சகோதரிகள் கேட்கிறார்கள். இதற்கு நான் பதில் சொல்லவா? சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு பால் விலையைக் குறைப்பேன் என்று ஸ்டாலின் சொன்னார். ஆட்சிக்கு வந்ததும் அதைச் செய்துகாட்டினார். பேருந்து கட்டணம் அதிகமாக உள்ளது என்று சொன்னீர்கள். மகளிருக்குப் பேருந்தில் டிக்கெட்டே வேண்டாம் என்று சொன்னார் ஸ்டாலின். இந்த இரண்டும் நம்முடைய கையில் இருந்தது, அதனால் செய்ய முடிந்தது. ஆனால், சிலிண்டர் விலையைக் குறைப்பது நம்முடைய கையில் இல்லை. அது யாருடைய கையில் உள்ளது? ஒன்றிய மோடி அரசின் கையில் உள்ளது.
அதேபோல பெட்ரோல் விலையை ஏற்றுவதும் பாஜக அரசுதான். சிலிண்டர் விலையை ஏற்றுவதும் பாஜக அரசுதான். சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டது, அதனால் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் எத்தனையோ முறை திமுக உறுப்பினர்கள் வாதாடியிருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். எனவே, சிலிண்டர் விலையைக் குறைக்கும் அதிகாரம் மோடி அரசின் கையில்தான் உள்ளது. இங்கு வாக்கு கேட்டு பாஜகவினர் வருவார்கள். அவர்களிடம் சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீர்கள் என்று கேளுங்கள். அவர்களுடன் கூட்டணியில் இருப்பது அதிமுக.
இந்தத் தேர்தலில் கூட்டணி இல்லை என்று இருவரும் சொல்கிறார்கள். ஆனால், தேசிய அளவில், மாநில அளவில் கூட்டணி இருக்கிறது என்பதை அவர்களே ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், அதிமுக, பாஜக என அவர்கள் இருவரிடமும் சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீர்கள் என்று கேளுங்கள். சிலிண்டர் விலையைக் குறைக்கச் சொல்லுங்கள். நாங்களும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம், போராடுவோம் என்ற உறுதியை வழங்குகிறேன். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு சிலிண்டர் விலையைக் குறைக்கும் அந்த இடத்துக்கு நாம் வந்துவிடுவோம். அப்போது சிலிண்டர் காஸ், பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்ற அந்த உறுதியை நான் வழங்குகிறேன்” என்று கனிமொழி தெரிவித்தார்.
காஸ் சிலிண்டர் விலை உயர்வு பெண்களைக் கடுமையாகப் பாதித்திருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதை நன்கு உணர்ந்திருப்பவராக, “15 லட்சம் ரூபாய் தருவதாக பாஜக கூறியது. அது வரவில்லை. காஸ் சிலிண்டர் மானியமும் வருவதில்லை” என்று செல்லும் இடங்களில் எல்லாம் கனிமொழி சிக்ஸர் அடிக்கிறார்.
1996-ல் ஐக்கிய முன்னணி, 1999-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக அங்கம் வகித்து மத்திய அமைச்சரவையில் முக்கியமான இலாக்காக்களையும் பெற்றது. அந்த வரிசையில் 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமையும் என்ற நம்பிக்கையில் கனிமொழி பேசுவதாகவே தெரிகிறது.